நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, கோகாய் சற்று கோபப்படக் கூடியவர் என்று கூறப்படுகிறது
ஹைலைட்ஸ்
- தனிப்பட்ட முறையில் நீதிபதிகள் தாக்கப்படுவது சரியல்ல, கோகாய்
- நீதித் துறைக்கு எதிராக இளைஞர்களை இது மாற்றிவிடும், கோகாய்
- கொலீஜியம் முறையில் பிரச்னை இல்லை, கோகாய் கருத்து
New Delhi: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், NDTV-க்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து மனத் திறந்து பேசியுள்ளார்.
அவர் ஆரம்பிக்கும்போது, “ஒரு தீர்ப்பு தவறாக இருக்கிறதென்றால் அதை விமர்சனம் செய்யுங்கள். அதில் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டுங்கள். ஆனால், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தூற்றுவதும், அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதும் ஏற்புடையதாகாது. இப்படி செய்வதன் மூலம், இளைஞர்களை நீதித் துறைக்குள் வரவழைப்பது கடினமானதாகிவிடும். குறிப்பாக, அவர்கள் நீதிபதி ஆக விருப்பப்பட மாட்டார்கள்” என்று கறாரா பேசினார்.
உச்ச நீதிமன்றத்துக்கு கொலீஜியம் முறையில்தான், தற்போது நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நியமன முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் நீதிபதிகள், நியமன முறையை மாற்ற ஆதரவு தர மறுத்து வருகின்றனர். இது குறித்து பேசிய கோகாய், “கொலீஜியம் நியமன முறையில் அனுபவத்துக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என்று சொல்வது தவறு. இது ஒன்றும் கொலீஜியம் முறையில் புதிதல்ல. இந்த முறையில் பேரம் நடப்பதாக சொல்வதும் தவறு.
பல சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக அனுபவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது. அதேபோல மத்திய அரசு தரப்பு, நீதிபதிகள் நியமனத்தில் சுணக்கம் காட்டி வருவதாக சொல்வதும் தவறு. அரசு, நீதிபதிகள் நியமனங்களைப் பொறுத்தவரை உடனடியாக முடிவெடுத்து விடும்.
நான் பிரதமரிடம், நீதிமன்றம் தரப்பிலிருந்த அனுப்பப்படும் பரிந்துரைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், அதை உடனே தெரிவிக்குமாறு கூறியுள்ளேன். எந்த காரணம் கொண்டும் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளேன். இதனால், நாங்கள் அனுப்பும் நீதிபதிகளின் பெயரை, இரண்டு நாளுக்குள் பரிசீலித்து அரசு தரப்பு பதில் கூறி விடுகிறது” என்று கூறினார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, கோகாய் சற்று கோபப்படக் கூடியவர் என்று கூறப்படுகிறது. அது குறித்து பேசிய அவர், “நான் யாரையும் சந்தோஷப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் அரசியல்வாதியோ, அதிகாரியோ கிடையாது. நான் எது சரியென்று நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். சில நேரங்களில் அது தவறாக இருக்கலாம். அதே நேரத்தில், சிலர் அபத்தமாக பேசினால், நான் எப்படி பதில் கொடுப்பது” என்று கேள்வி எழுப்பினார்.