This Article is From Nov 13, 2019

'RTI வரம்புக்குள் தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும்' - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும். அவருக்கு விதி விலக்கு அளிக்கப்படக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது.

New Delhi:

தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும். அவருக்கு விதி விலக்கு அளிக்கப்படக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2010-ல் ஆர்.டி.ஐ. ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

அவரது தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 'உச்ச நீதிமன்றம் என்பது எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக பொதுநலனுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் ஒருவரின் நலனுக்காக மக்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது. அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் இடம்பெறச் செய்ய வேண்டும்' என்று வாதாடினார். 

இந்த வழக்கில், ஆர்.டி.ஐ. வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் சேர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எதிர்த்தார். 

இதன்பின்னர் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை கடந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஓய். சந்திராசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சிவ் கன்னா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
 

.