This Article is From Nov 26, 2018

புயல் பாதித்த பகுதிகளை ரயிலில் சென்று ஆய்வு செய்கிறார் முதல்வர்!

நாளை இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகைக்கு செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tamil Nadu Posted by

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் ரயிலில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.

கடந்த 16ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 60–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி ஆய்வு செய்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை பகுதிகளை வானில் இருந்தே ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர்.

Advertisement

இதனையடுத்து தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டிருந்த நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு மழை பெய்து மோசமான வானிலை நிலவியதால் புயல் சேத ஆய்வை தொடராத முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னைக்கே திரும்பினார்.

இந்நிலையில் கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார். இதற்காக நாளை இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகைக்கு செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement