நீட் விவகாரத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முழுக் காரணம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112வது பிறந்த தினத்தினையொட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் உரையாற்றிய ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டின் முன்வைத்துள்ளார். இந்த விழாவில் அவர் பேசியதாவது.
"கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்டார்கள்.
அரியலூர் அனிதாவில் தொடங்கி, பெருவலூர் பிரதீபா, கூனிமேடு மோனிஷா, திருப்பூர் ரீதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிஸ்ரீதுர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் இவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? தற்கொலை என்று கூட சொல்லமாட்டேன். கொலை நடந்துள்ளது. இவர்களை மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். 13 பேர் கொலைக்கு யார் காரணம் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு முழுக் காரணம்.
சட்டமன்றத்தில் அவர்கள் பேசினால் பதிவாகிறது. நாங்கள் குறுக்கிட்டு பேசினால், பதிவாகாது. சபைக் குறிப்பில் இருந்து எடுத்து விடுவார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்றத்தில் தி.மு.க.,தான் நீட் பிரச்சனையை கொண்டு வருகிறது. தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க.,தான் கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்று முதன் முதலில் திமுகதான் குரல் எழுப்பி அதற்கு பிறகு ஏற்றுக்கொண்டு, ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி 2 மசோதாக்களை தில்லிக்கு அனுப்பினோம்.
இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.
சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுண்டா? இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிச்சல், தெளிவு உங்களிருக்கிறதா? மாநிலத்துக்கு வந்து சேர வேண்டிய நிதியை கூட பெறமுடியாத ஒரு போக்கத்த பசங்களாக இந்த ஆட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள். குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்ததா உங்களுக்கு? முத்தலாக் சட்டத்தை எதிர்த்தீர்களா? மத்திய அரசுக்கு அடிபணிந்து கூனிக் குறுகி இன்றைக்கு ஒரு அடிமை ஆட்சியை தலையாட்டி பொம்மையாக நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்களே தவிர இந்த அடிமை ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். அதைத்தான் இந்த முப்பெரும் விழாவில் நாமும் சபதம் எடுப்போம்." என்றார் கூறியுள்ளார்.