This Article is From Aug 25, 2020

கேரள அரசுக்கு எதிராக ‘திடீர்’ நம்பிக்கையில்லா தீர்மானம்; 4 மணி நேரம் பதிலளித்த பினராயி விஜயன்!

இந்த தீர்மானம் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், சுமார் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் பதில் அளித்தார்.

கேரள அரசுக்கு எதிராக ‘திடீர்’ நம்பிக்கையில்லா தீர்மானம்; 4 மணி நேரம் பதிலளித்த பினராயி விஜயன்!

சுமார் 3 மணி நேரத்தை அவரது பதில் உரை கடந்தபோது, எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் அவையிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளிநடப்பு செய்ய ஆரம்பித்தனர்.

ஹைலைட்ஸ்

  • நேற்றைய கூட்டத் தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது
  • நேற்று கூட்டத் தொடர் சுமார் 12 மணி நேரம் நடந்தது
  • நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது
Kochi:

கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். தீர்மானத்தை எதிர்த்து 87 பேர் வாக்களித்தனர். இதனால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த தீர்மானம் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், சுமார் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் பதில் அளித்தார். 

நேற்று காலை 9 மணிக்கு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்தது. முதலில் சட்டமன்றத்தில் பிற பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விவாதங்களுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கூட்டத் தொடர் முடிவடைந்தது. 

பினராயி விஜயன், தான் அளித்த பதிலின் போது, அரசு அமல் செய்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். சுமார் 3 மணி நேரத்தை அவரது பதில் உரை கடந்தபோது, எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் அவையிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளிநடப்பு செய்ய ஆரம்பித்தனர். அவர்கள், ஊழலுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியபடி நகர்ந்து சென்றனர். 

அப்போது முதல்வர் விஜயன், “உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். அதை ஏன் கேட்க மறுக்கிறீர்கள்?” என உஷ்ணமடைந்தார். 

எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபோது, அவைத் தலைவர், கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார். அவர் மேலும், ‘முன்னர், முதல்வர் மிக நீண்ட பதில் அளிக்கிறார் என்றீர்கள். இப்போது அவர் பதில் அளிக்க மறுக்கிறார் என்கிறீர்கள்' என கோபமடைந்தார். 

காங்கிரஸ் தரப்பு எம்எல்ஏ, விடி சதீஷன் தான், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தார். அவர், “முதல்வர் ஒரு மதிப்பிற்குரிய நபர். அவர்தான் கப்பலின் கேப்டன். ஆனால், அவரால் கப்பலை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவரது அமைச்சரவை. தங்க கடத்தல் வழக்கில், அவரை நான் முன்னர் எச்சரித்தேன். அப்போது முதல்வர் அலுவலகம்தான் இந்த கடத்தல் வழக்கில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை” என்று அதிரடியாக பேசினார். 

கேரளாவையே கலக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில், சுமார் 9 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் மற்றும் கமிஷன் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முதல்வர் அலுவலக்கைச் சேர்ந்தவர்களுக்கே தொடர்பு இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜயன், “இதுவரை இந்த வழக்கை விசாரித்து வரும் அமைப்புகள், முதல்வரோ அல்லது அவரது அலுவலகமோ வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தின் முன்னர் தெரிவித்துள்ளனவா? அரசு தரப்பிலிருந்து இதுவரை யாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? இந்த வழக்கை விசாரித்து வருபவர்களுக்கு அரசு அனைத்து வித ஒத்துழைப்பையும் நல்கும்” என்று உறுதியளித்தார். 

அவர் தொடர்ந்து, “உண்மை இப்படி இருக்கையில், ஊடகத்தின் ஒரு பிரிவு ஆளும் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது. 

காங்கிரஸ், பாஜகவின் ‘பி' டீம் போல செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் அதிகார வெறியினால்தான் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்துள்ளது. அதையேதான் காங்கிரஸ் கேரளாவிலும் செய்யப் பார்க்கிறது” என்று முடித்தார். 

.