This Article is From Dec 24, 2019

இந்தியாவின் முப்படைக்கும் ஒரே தலைமை தளபதி! அமைச்சரவை குழு ஒப்புதல்!!

A Chief of Defence Staff என்கிற முப்படைக்கும் ஒரே தலைமை தளபதி பொறுப்பு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக உள்ள 5 நாடுகளில் இருக்கிறது. இந்த பொறுப்புக்கு தரைப்படை, விமானப்படை அல்லது கப்பற்படையில் இருந்து ஒருவர் நியமிக்கப்படுவார்.

சுதந்திர தின உரையின்போது முப்படைக்கும் ஒரே தலைமை தளபதியை நியமிப்பது குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.

New Delhi:

இந்தியாவின் முப்படைக்கும் ஒரே தலைமை தளபதியை நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. Chief of Defence Staff (CDS) எனப்படும் இந்தப் பொறுப்பு, மூன்று படைகளுக்கும் ஒரே தலைவர் மற்றும் அரசுக்கான ஆலோசகர் என்ற பணிகளை உள்ளடக்கியதாகும். 

இந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுபவர் முப்படைக்கான ஆயுத கொள்முதல், முப்படைகளின் ஆபரேஷன்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளையும் செய்வார்கள். இந்த பதவி எத்தனை ஆண்டுகளுக்கு என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 5 நாடுகளில் இந்த Chief of Defence Staff (CDS) பொறுப்பு உள்ளது. அதன் அடிப்படையில் இந்த பொறுப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை ராணுவ ஆலோசகராகவும் இந்த முப்படைக்கான தலைமை தளபதி மேற்கொள்வார். இருப்பினும், அந்தந்த படைகளின் தலைமை தளபதியின் பணியில் இவர் குறுக்கிட மாட்டார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முப்படைகளில் இருந்து ஒருவர் Chief of Defence Staff (CDS) பொறுப்புக்கு தேர்வு செய்யப்படுவார். முப்படைகளின் தலைமை தளபதிக்கு வழங்கப்படும் ஊதியம் அவருக்கும் வழங்கப்படும். 

தற்போது முப்படைகளின் தலைமை தளபதி Chiefs of Staff Committee (CSC) என்ற பொறுப்பு இந்திய ராணுவத்தில் உள்ளது. இந்த பொறுப்பில் பிபின் ராவத் இருந்து வருகிறார். இதனை விடவும் கூடுதல் அதிகாரம் பொறுந்தியதாக CDS பதவி கருதப்படும். 

1999-ல் கார்கில் போர் நடைபெற்றது. இதன்பின்னர்தான் CDS பதவியின் அவசியம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. கார்கில் போரின்போது பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள், இந்தியப் பகுதிக்குள் நுழைந்து முக்கிய இடங்களை கைப்பற்றினர். இது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

முன்னதாக சுதந்திர தின உரையின்போது, முப்படைகளுக்கும் ஒரே தளபதி தொடர்பான அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

அப்போது அவர், 'படைகள்தான் நமது நாட்டின் பெருமை. நமது படைகளை மேலும் வலுமைப்படுத்த, ஒருங்கிணைப்பை இன்னும் தீவிரப்படுத்த இந்த செங்கோட்டையில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட விரும்புகிறேன். இந்தியாவின் முப்படைக்கும் CDS எனப்படும் ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார். அவரது நியமனம் இந்திய படைகளை இன்னும் வலிமைப்படுத்தும்' என்று தெரிவித்திருந்தார். 

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மனோகர் பாரிக்கர் 2 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அவர் CDS பொறுப்பு குறித்து முக்கியமாக வலியுறுத்தினார். 

CDS பொறுப்பில் நியமிக்கப்படுபவர், தான் ஏற்கனவே இருக்கும் அரசுப் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஏற்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றதும், அடுத்தது 5 ஆண்டுகளுக்கு எந்தவொரு தனியார் பொறுப்பையும் ஏற்க கூடாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி முப்படைகளுக்குமான ஒரே தலைமை தளபதி பொறுப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோன்று, CDS பொறுப்பின் பணிகள், பொறுப்புகள், கடமைகள் உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவை கமிட்டி இறுதி செய்திருக்கிறது. 

.