சமீப காலமாக, குழந்தைகள் மீதான வன்கொடுமை தாக்குதல் குறித்த செய்திகள் அதிகமாக வெளிவருவதை காண முடிகிறது. வீட்டில் இருந்து பொது வெளி வரை அனைத்து இடங்களிலும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு, சென்னை அயனாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமை செய்தி அனைவரின் மனதையும் தாக்கியது. குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள் நிறைய உள்ளன. எனவே, ஒஎம்ஆர் சாலையில் உள்ள ஹாப்பினஸ் டவர்ஸ் என்ற குடியிருப்பில், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரியா செந்தில்குமார், மஹாலக்ஷ்மி சத்தியநாராயணன் என்ற இரண்டு பெண்கள், இந்த விழிப்புணர்வை நிகழ்ச்சியை ஒருங்கினைத்தனர். ஹாப்பினஸ் டவர்ஸ் குடியிருப்பு பகுதியை சுற்றி இருந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைப்பெற்ற நிகழ்ச்சியில், பாலியல் வன்கொடுமையினால் தீண்டும் போது எப்படி தடுப்பது?ஆபத்தின் போது எப்படி உதவி நாடுவது? தவறு நடந்த பின்பு பெற்றோர்களிடம் விவரத்தை சொல்வது என இப்படி பலவற்றை குறித்து குழந்தைகளிடம் விவாதிக்கப்பட்டது. பதாதைகள், ஓவியங்கள் மூலம் பாலியல் வன்கொடுமை குறித்து குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் இருந்த ஆசிரியர் வசந்தி, குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த புரிதலை விளக்கினார். குழந்தைகளிடம் ஏற்படும் பழக்க மாற்றங்களை கண்டறிவது எப்படி என்பது குறித்து விவாதித்தார். சனிக்கிழமை காலை, குடியிருப்பு பகுதியில் இருந்த குழந்தைகள், பெற்றோர்கள், என அனைத்து வயதினரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வாக்கத்தானில் கலந்து கொண்டனர். முக்கியமாக, பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஸ்லோகன்கள் சொல்லியப்படி வாக்கத்தான் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த சமயத்தில் கட்டாயம் தேவைப்படுகிறது. குழந்தைகளுடன் உரையாடும் போது, அவர்களின் புரிதலுக்கு ஏற்ற சந்தேகங்களை எழுப்புகின்றனர். பெற்றோர்கள் அவற்றை குறித்து குழந்தைகளுக்கு புரிய வைப்பது அவசியமாகும்.