குழந்தை சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ந்தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழந்தான். இதைத்தொடர்ந்து, குழந்தை சுஜித்தை மீட்க 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தன.
சுஜித்தை மீட்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும், அதிர்வுகளால் சுஜித் 88 அடிக்கு சென்றுவிட்டான். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை நேற்று அதிகாலை மீட்டு வெளியே எடுத்தனர்.
தொடர்ந்து, சுஜித்தின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன்பின், குழந்தை சுஜித்தின் உடல் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மீட்பு பணியில் ஏற்பட்ட தாமதமே சுஜித் உயிரிழப்புக்கு காரணம் என தமிழக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து, மீட்பு பணிகளுக்கு ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனிடையே, குழந்தையின் குடும்பத்தினருக்கு திமுக 10 லட்சம் நிதியுதவி அளித்திருந்தது. அதன்பின், அதிமுக சார்பில் 10 லட்சம் நிதியுதவியும், தமிழக அரசு சார்பில் 10 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். தொடர்ந்து, சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி ஆறுதல் கூறினார். அப்போது, அவரிடம் தனது மனைவிக்கு அரசு வேலை வழங்கும் படி சுஜித்தின் தந்தை கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, சுஜித்தின் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், இடைத் தேர்தலைப் போன்று அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.