தேசிய பேரிடர் மீட்பு படையினர் முதலையை பிடித்தனர்.
Vadodara, Gujarat: நகருக்குள் புகுந்து அச்சுறுத்திய முதலையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி பிடித்தனர். இந்த சம்பவம் காண்போரை திகிலடைய செய்தது.
குஜராத் மாநிலம் வடோதராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 500 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து நகரத்தின் பல இடங்களை வெள்ளத்தில் மிதக்க விட்டது.
ஆற்றில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால் அங்கிருந்த முதலைகள் சில தண்ணீரில் நீந்தியபடியே தெருக்களுக்குள் வந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தெரு ஒன்றில் சுற்றி வந்த முதலை மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், முதலையை பிடிப்பதற்கான பொருட்களுடன் சம்பவ இடததிற்கு வந்தனர்.
முதலில் தண்ணீருக்குள் இருந்த முதலையின் கழுத்தில் சுருக்கு கண்ணி போடப்பட்டது. இதனால் முதலை சீறத் தொடங்கியது. இதன் பின்னர் அதனை இழுத்துக் கொண்டே வந்த மீட்பு படையினர், தரைக்கு முதலை வந்ததும் அதன் முகத்தில் துணியைப் போட்டு மறைத்தனர்.
அதைத் தொடர்ந்து முதலை முழுவதுமாக கட்டப்பட்டது. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் எடுத்து பரவ விட்டுள்ளனர். இது இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது.
மேலும் முதலைகள் நகருக்குள் இருக்கிறதா என்பது குறித்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.