சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வருகிறது
Washington: ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்த மசூத் அசார் பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர். கடந்த 2016-ல் ஜம்மு காஷ்மீர் ஊரி முகாமில் தாக்குதல் நடந்தது. இதில் 17- வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் மசூத் அசார்.
அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் தடை விதித்து வருகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட தீர்மானம் நிறைவேறாது.
தற்போது ஐ.நா. சபையில் 73-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சீனா கூறியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், “ பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் நாங்களும் அதனை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பதால்தான் மறுப்பு தெரிவிக்கிறோம்” என்றார்.