This Article is From Mar 30, 2020

கொரோனா வைரஸின் 2ஆம் அலை: தாக்குப்பிடிக்குமா சீனா?

இதுவரை சீனாவில் கொரோனா தொற்று காரணமாக, 3,300 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா வைரஸின் 2ஆம் அலை: தாக்குப்பிடிக்குமா சீனா?

கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று குறித்து முதலில் மூடி மறைத்தது சீனா.

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது
  • சீனாவில் தற்போது வரை 80,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
  • கொரோனாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கையை WHO பாராட்டியது

சீனாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் பலருக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலைப் பரவல் வந்துவிடுமோ என்கிற அச்சம் உள்ளது. ஆனால், அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவே சீனா சொல்கிறது. 

சீனாவின் உஹான் நகரத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவ ஆரம்பித்தது. தற்போது அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், சமீபத்தில் சீனாவுக்கு வந்தவர்களில் 693 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய சுகாதார அணையத்தின் செய்தித் தொடர்பாளர், மி ஃபெங், “சீனாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது” என்கிறார். 

வெளிநாடுகளில் இருந்து சீனத் தலைநகரம் பீஜிங்கிற்கு வந்தவர்களுக்குத்தான் அதிகமாக கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 

இதுவரை சீனாவில் கொரோனா தொற்று காரணமாக, 3,300 பேர் உயிரிழந்துள்ளனர். 81,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று குறித்து முதலில் மூடி மறைத்தது சீனா. ஆனால், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து, அது குறித்த தகவல்களை சர்வதேச அமைப்புகளிடம் பகிரத் தொடங்கியது. இதற்கு உலக சுகாதார நிறுவனமும், பாராட்டுகளைத் தெரிவித்தது. 

கடந்த ஏழு நாட்களில் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வந்தவர்களில் 313 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால், உள்நாட்டில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா பரவியது. உஹான் நகரத்தில் கடந்த 10 நாட்களில் ஒரேயொருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மாதங்களாக ஊரடங்கிலிருந்த உஹானுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஹூபே மாகாணத்திலிருந்து சீனாவில் உள்ள மற்ற இடங்களுக்குச் செல்வதற்கான விமானங்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. ஆனால் ஹூபே முதல் பீஜிங்கிற்கான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை வந்துவிடக் கூடாது என்பதில் சீனா கவனமாக இருப்பதாகவும், எந்த விதத்திலும் அந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் ஃபெங் கூறுகிறார். 

.