New Delhi: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வுஹான் நகரத்திற்கு மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கும், மீதமுள்ள இந்தியர்களை அங்கிருந்து மீட்டு வருவதற்கும் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் தயாராக நிலையில், இதற்கான அனுமதி வழங்குவதை சீனா வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மருத்துவப் பொருட்களை எடுத்து வரும் இந்திய விமானப்படையின் சி-17 குளோபல் மாஸ்டர் விமானத்தை அனுமதிப்பதில் எந்த தாமதமும் இல்லை என சீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவத்துள்ளது.
இந்த தாமதம் குறித்து பெய்ஜிங்கில் இருந்த வெளியேறிய வட்டாரங்கள் அளித்த தகவல்படி, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் நிவாரணம், மீட்பு நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்கின்றனர்.
மேலும், நிவாரண விமானத்திற்கான அனுமதியை சீன அரசு ஏன் தாமதப்படுத்துகிறது? எங்கள் ஆதரவின் அடையாளமாக வழங்கப்பட்ட இந்திய உதவிகளில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லையா? வுஹானில் இருந்து நம் நாட்டினரை வெளியேற்றுவதற்கும், அவர்களை கஷ்டத்திற்கும் மன வேதனையுக்கும் உள்ளாக்குவதில் அவர்கள் ஏன் சாலைத் தடையை உருவாக்குகிறார்கள்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சீனாவுக்கு மருந்துபொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் வுஹான் நகருக்கு அனுப்பப்படும் என்றும், இந்த விமானத்தை பயன்படுத்தி வுஹானில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்கள் நாடு திரும்பலாம் என மத்திய அரசு கடந்த பிப்.17ம் தேதி தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய விமானம் தங்களை மீட்டு சென்று விடும் என்ற நம்பிக்கையில் வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும் போது, இந்த தாமதம் சிக்கியுள்ளவர் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினருக்கும் மன வேதனை தருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிக்கி தவிக்கும் சீனாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத தொடக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், வுஹானில் இருந்து இந்தியர்களை மீட்க உதவியதற்காக ஜின்பிங்கிற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
முன்னதாக நேற்றைய தினம், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், வுஹானில் இருந்து ஏராளமான இந்தியர்களை வெளியேற்ற சீனா இந்தியாவுக்கு உதவியது. தற்போது, வுஹானில் உள்ள 80 பேர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்திய விமானத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது போன்ற எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 எட்டியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.