சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய 118 செயலிகளை இந்தியா சமீபத்தில் தடை செய்தது
Beijing: சமீபத்தில் சீனாவை சேர்ந்த 118 மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், “இந்தியா சீன நிறுவனங்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாகும்.” என சீனா தற்போது கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் இருபது இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவின் டிக்டாக் உட்பட பல செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்ருந்தது.
தற்போது இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சீன செயலியான பப்ஜி உட்பட 118 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்தது. தகவல் பாதுகாப்பையும், தேசிய பாதுகாப்பையும் காரணம் காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு தடை விதித்த மொத்த சீன செயலிகளின் எண்ணிக்கையானது 224ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வர்த்தக அமைச்சக மாநாட்டில் சீன பயன்பாடுகள் மீதான இந்தியாவின் புதிய தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங், “இந்தியா, தேசிய பாதுகாப்பு என்கிற கருத்தினை தவறாக பயன்படுத்தி வருகின்றது. சீன நிறுவனங்களுக்கு எதிராக பாரபட்சமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமாக உலக வர்த்தக அமைப்பு விதிகளை இந்தியா மீறியுள்ளது.” என காவ் ஃபெங் கூறியுள்ளார்.