This Article is From Jun 22, 2020

லடாக் எல்லையில் நடந்த மோதலில் ராணுவ அதிகாரி உயிரிழந்ததாக சீனா ஒப்புதல்!!

லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து, இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவின் எல்லையில் அமைந்திருக்கும் சுஷுல் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்
  • இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையின்போது சீனா தகவல்
  • லடாக் பிரச்னை தொடர்பாக சுமுகமான முடிவு விரைவில் எட்டப்பட வாய்ப்பு
New Delhi:

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருடன் நடந்த  மோதலில்,  சீன ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. இந்திய அதிகாரிகளுடன் நடந்த  பேச்சுவார்த்தையின்போது இந்த  தகவலை சீனா வெளியிட்டது. 

லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து, இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவின் எல்லையில் அமைந்திருக்கும் சுஷுல் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, சீனா தரப்பில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் லடாக் எல்லையில் நடந்த மோதலின்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக கடந்த 6-ம்தேதி இதேபோன்ற ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இதில் இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் எல்லையில் குவித்த படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டன. 

இதன்பின்னர் கடந்த வாரம் திங்கட்கிழமை  இரவு  இரு  நாட்டு படைவீரர்களும் பரஸ்பரம் திரும்பிக் கொண்டிருக்கும்போது மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்டவற்றால் சீன ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதில்  ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தார்கள். சமீப காலமாக இரு நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும்.  ஆனால் உயிரிழப்பு என்ற அளவுக்கு நிலைமை சென்றது கிடையாது.

கடைசியாக 1967-ல் ஏற்பட்ட மோதலின்போதுதான் உயிரிழப்புகள் நேர்ந்தன. அதன்பின்னர் சுமார் 43 ஆண்டுகள் கழித்து  சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் வீரர்கள் பலியாகி உள்ளனர். 

அதே நேரத்தில் 76 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. சீனா தரப்பில் உயிரிழப்பு  மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எல்லையில், பணியாற்றும் வீரர்களுக்கு ஆயுதங்கள் அளிப்பது  என்றும், மிக மோசமான நேரத்தில் இதனை  பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியும், எல்லையில் நிலைமைக்கேற்ப ராணுவம் முழு சுதந்திரத்துடன் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

லடாக் எல்லை மட்டுமில்லாமல், சிக்கிம், அருணாசலபிரதேச எல்லைகளிலும் இதே நடவடிக்கை எடுக்குமாறு வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 

.