“கொரோனா வைரஸை உஹானுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க ராணுவமாக இருக்கலாம்”
ஹைலைட்ஸ்
- கொரோனாவுக்கு அமெரிக்காவும் காரணமாக இருக்கலாம்: சீனா குற்றச்சாட்டு
- சீனாவின் உஹான் நகரிலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது
- சீனாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்
Washington, United States: கோவிட்-19 என சொல்லப்படும் கொரோனா வைரஸ், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், சீனா - அமெரிக்க அரசுகளுக்கு இடையில் பனிப் போர் மூண்டுள்ளதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதில்தான் இந்த பனிப் போர் மையம் கொண்டுள்ளது.
உஹான் எனப்படும் சீன மாகாணத்தின் உணவுச் சந்தையிலிருந்துதான் இந்த கொரோனா வைரஸ், மிருகத்திலிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இதற்கு ஸ்திரமான ஆதாரம் இதுவரை கிடைக்காத நிலையில் அமெரிக்கா மீது ‘பகீர்' குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது சீனா.
சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ஜாவ் லிஜியான், “கொரோனா வைரஸை உஹானுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க ராணுவமாக இருக்கலாம்,” என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் தொடர்ந்து ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், “காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் சமீபத்தில் இறந்தவர்களின் ரத்த மாதிரியைச் சோதனை செய்து பார்த்ததில் கோவிட்-19 பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது” என்கிறார்.
அந்த வீடியோவைப் பகிர்ந்து ஜாவ், “காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் இறந்தவர்களில் எத்தனை பேர் கோவிட்-19 மூலம் இறந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனால் சீற்றமடைந்த அமெரிக்க அரசு தரப்பு, அமெரிக்காவுக்கான சீனத் தூதருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. சீனத் தூதர் குய் டியான்காய்க்கு, ஜாவ் பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவுக்கான அமெரிக்க தூதர், டேவிட் ஸ்டூவர், டியான்காய்க்கு சம்மன் அனுப்பி, “உலக அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள ஒரு நோய் குறித்து யாருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டு, அதைத் திசை திருப்பப் பார்க்கிறது சீனத் தரப்பு.
வதந்திகளை கிளப்பிவிடுவது முட்டாள்தனமானது. அது சீன மக்களுக்கும் உலகிற்கும் நல்லதல்ல,” என்று காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்படப் பல அமெரிக்க அரசு தரப்பு அதிகாரிகளும் கொரோனா அல்லது கோவிட்-19 வைரஸை, தொடர்ச்சியாக ‘உஹான் வைரஸ்' என்று சொல்லி வருவது, பொய் பிரசாரத்தின் ஒரு பகுதிதான் என்று சீன தரப்பு குற்றம் சாட்டுகிறது.
ஆனால் இன்னொரு தரப்போ, ‘சீனாவில்தான் இந்த வைரஸ் தொற்று உருவானது. அதை ஒப்புக் கொள்ளாமல், திசை திருப்பப் பார்க்கிறார்கள்' எனச் சொல்லப்படுகிறது. சீனாவில் நோய்த் தொற்று புயல் வேகத்தில் பரவியிருந்தாலும், தற்போது அங்கு அது பெரும் அளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பலர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்த விஷயத்தைப் பிரதானப்படுத்தி, நோய் ஆரம்பித்த விவகாரத்தை மறைக்கவே சீனா முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு தழுவிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது அமெரிக்க அரசு. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் குற்றச்சாட்டு பற்றிப் பேசுகையில், “அவர்களுக்கு இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியும். எல்லோருக்கும் தெரியும்,” என்று காட்டமாகப் பதில் சொன்னார்.