’பிஎம் கேர்ஸூக்கு சீன நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதி’; பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி!
New Delhi: ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதாக பாஜக விமர்சனம் செய்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பி.எம்.கேர்ஸூக்கு சீன நிறுவனங்கள் நிதியளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீனாவுக்கும் இடையே, சுமூக உடன்பாடு இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, சியோமி, ஒப்போ, ஹூவாய் உள்ளிட்ட பிரபல சீன நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் பி.எம்.கேர்ஸூக்கு நிதி சேர்ந்துள்ளது. இது மிகுந்து கவலை அளிப்பதோடு, தேசிய பாதுகாப்பையும் ஆபத்தாக்குகிறது.
இதுதொடர்பாக பாஜக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனினும், காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் என்.டி.டி.வி யிடம் கூறியதாவது, "கொரோனாவுக்காக பி.எம் கேர்ஸ் நிதியில் நன்கொடை வழங்குவதும், சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை போன்ற ஒரு தனியார் அமைப்புக்கான நன்கொடைகளுக்கு சமமானதல்ல"
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி "2020 மே.20 ஆம் தேதி நிலவரப்படி பிரதமர் மோடி ரூ.9,678 கோடியை சர்ச்சைக்குரிய நிதியாக பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிர்ச்சியூட்டும் பகுதி என்னவென்றால், சீனப் படைகள் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த போதிலும், பிரதமர் மோடி சீன நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக தனது கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதில், சர்ச்சைக்குரிய ஹூவாவே நிறுவனமானததிலிருந்து பிரதமர் ரூ.7 கோடி நிதி பெற்றுள்ளாரா? சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்துடன் ஹூவாவேக்கு நேரடி தொடர்பு இருக்கிறதா?
டிக் டாக்கை வைத்திருக்கும் சீன நிறுவனம் சர்ச்சைக்குரிய பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.30 கோடி நிதி அளிக்க ஏற்பாடு செய்துள்ளதா? சீனாவின் 38 சதவீத முதலீட்டைக் கொண்ட பேடிஎம், 100 கோடி கொடுத்துள்ளதா? சீன நிறுவனமான சியோமி ரூ.15 கோடியை அளித்துள்ளதா? சீன நிறுவனமான ஒப்போ ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎம் கேர்ஸ் பிரதமரின் தனிப்பட்ட கணக்கு போல இயங்குகிறது. இந்த நிதியத்தின் சட்ட அங்கீகாரம், அது செயல்படும் விதம், அங்கு நிதி எவ்வாறு கையாளப்படுகிறது? இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தணிக்கைக்கு கூட உட்படுத்தவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக வெளியில் தெரியாத ரகசியமாக, பொறுப்புணர்வில்லாமல், வெளிப்படைத்தன்மையில்லாமல் பிரதமரால் மட்டுமே கையாளப்படுவதாக தெரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.