This Article is From Jun 30, 2020

லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் நாட்டின் பிரமாண்ட வரைபடத்தை உருவாக்கிய சீனா!

தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க இந்தியா மற்றும் சீனத் தரப்பின் லெஃப்டெனென்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை இன்று லடாக்கில் நடைபெறுகிறது

சுமார் 81 மீட்டர் நீளத்துக்கும், 25 மீட்டர் அகலத்துக்கும் வரைபடம் மற்றும் குறியீடும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • அதிர்ச்சியளிக்கும் செயற்கைக் கோள் படங்கள்
  • இந்திய - சீன தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன
  • எல்லையில் யார் ஊடுருவினாலும் பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி
New Delhi:

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் லடாக்கின் பங்கோங் ஏரிக்கு அருகிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் நாட்டின் வரைபடத்தை உருவாக்கியுள்ளது சீனா. மேலும் சீன மொழியான மாண்டரினில் ஒரு குறியீட்டையும் பதித்துள்ளது. 

‘Finger 4' (ஃபிங்கர்) மற்றும் ‘Finger 5' பகுதிக்கு இடையில் சுமார் 81 மீட்டர் நீளத்துக்கும், 25 மீட்டர் அகலத்துக்கும் வரைபடம் மற்றும் குறியீடும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வரைபடம் மற்றும் குறியீடு செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகத் தெரிகின்றன. 

ஃபிங்கர் என்பது, மலைப் பகுதியிலிருந்து பங்கோங் ஏரிக்கு வரும் பாதையாகும். இப்படி மலையிலிருந்து சரிந்து வரும் ஒவ்வொரு பகுதிக்கும் ஃபிங்கர் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியா தனக்கு ஃபிங்கர் 1 முதல் ஃபிங்கர் 8 வரை, ரோந்து பணியில் ஈடுபட உரிமையுள்ளது எனச் சொல்கிறது. அதே நேரத்தில் சீனத் தரப்பு, தங்களுக்கு ஃபிங்கர் 8 முதல் ஃபிங்கர் 4 வரை ரோந்து செய்ய உரிமையுள்ளது என வாதம் வைக்கிறது. தற்போது ஃபிங்கர் 4 பகுதிதான் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையாக கருதப்படுகிறது. இந்த இடத்தில்தான் மே மாதம் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். ஃபிங்கர் 4 பகுதியில் தங்களின் துறுப்புகளை களமிறக்கியுள்ள சீனா, அதைத் தாண்டி இந்திய ராணுவத் தரப்பை ரோந்து செய்ய அனுமதிப்பதில்லை. 

tb6b2m8o

India-China: பிரச்னைக்குரிய இடத்தில் படம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் NDTVக்கு பிளேனட் லேப்ஸின், செயற்கைக்கோள் படங்கள் கிடைத்தன. அதில் சீனத் தரப்பு தங்களின் புதிய முகாம்களை அமைத்துள்ளது மற்றும் புதிய கட்டுமானங்களை உருவாக்கியுள்ளதும் தெளிவாகத் தெரிகின்றன. 

சீனத் தரப்பு சுமார் 186 கூடாரங்களை அமைத்துள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பார்க்க முடிகிறிது. ஃபிங்கர் 5 மற்றும் ஃபிங்கர் 4 பகுதிகளில் சீனத் தரப்பு, அதிகளவில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் ஃபிங்கர் 3 முதல் ஃபிங்கர் 1 வரை சீனாவின் கட்டுமானங்கள் இல்லை. 

v3qffgu

சர்ச்சைக்குரிய இடத்தில் 186 கூடாரங்களை உருவாக்கியுள்ளது சீனா.

இப்படியான சூழலில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் லடாக் பகுதியில் அத்துமீற நினைத்தவர்களுக்கு இந்தியத் தரப்பு தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. சகோதரத்துவத்தை இந்தியா போற்றுகிறது. அதே நேரத்தில் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்பட்டால் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல சீனாவுக்கான இந்தியத் தூதர், விக்ரம் மிஸ்டிரி, “எங்கள் தரப்பிலிருந்து இந்த விவகாரத்தில் மிகத் தெளிவாக இருக்கிறோம். இந்தியா ராணுவத் தரப்பு, சாதாரணமாக ரோந்துப் பணியில் ஈடுபடும் பகுதிகளில் சீனா இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்,” என்றுள்ளார். 

கடந்த பல ஆண்டுகளாக இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே பல நேரங்களில் மோதல் வெடித்துள்ளது. ஆனால், அது வீரர்கள் உயிரிழக்கும் அளவுக்குப் போனதில்லை. ஆனால் சமீபத்திய மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள், சீனத் தரப்பால் கொல்லப்பட்டனர். இரு தரப்பு பதற்றத்தைத் தணிக்க 2019 ஆம் ஆண்டு உஹான் மாநாடு நடைபெற்றது. ஆனால், அது பெரிதாக பலன் கொடுக்கவில்லை. 
 

pa8bh9b

சீனக் கட்டுமானங்களைக் காண்பிக்கும் படங்கள்.

தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க இந்தியா மற்றும் சீனத் தரப்பின் லெஃப்டெனென்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை இன்று லடாக்கில் நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் சர்ச்சைக்குரிய நிலப் பரப்புகளில் இருந்து இரு தரப்புகளும் விலகிச் செல்வது குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக சீனத் தரப்பு, தாங்கள் முகாமிட்டுள்ள பகுதிகளிலிருந்து விலகினால்தான் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நிலவியது போல அமைதியான சூழல் நிலவும். 

சீனா எப்போது அத்துமீறி செயல்பட்டாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத் தரப்பும் தங்கள் படைகளை எல்லையில் குவித்துள்ளது. இந்தியத் தரப்பு எல்லைப் பகுதியில் தங்கள் படைகளை குவிப்பது குறித்து எந்த வித தகவலையும் NDTV அளிப்பதில்லை. 


 

.