This Article is From May 19, 2020

“தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவைத் தடுக்க மருந்து!”- சீன ஆய்வகம் தகவல்

உலகளவில் கொரோனா வைரஸுக்கு எதிரான சுமார் 100 தடுப்பு மருந்துகள் சோதனையில் இருக்கின்றன.

“தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவைத் தடுக்க மருந்து!”- சீன ஆய்வகம் தகவல்

உலக சுகாதார அமைப்பு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • சீனா தற்போது கொரோனாவிலிருந்து பெருமளவு விடுபட்டுள்ளது
  • தற்போது அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
Beijing, China:

நாளுக்கு நாள் உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், அதைத் தடுப்பூசி இல்லாமலேயே தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை வைத்து தடுக்க முடியும் என்று சீன நாட்டின் ஆய்வகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ், முதன்முதலாக கடந்த ஆண்டு சீனாவில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. 

சீனாவின் மிக உயரிய பெக்கிங் பல்கலைக்கழக ஆய்வகத்தில், கொரோனா வைரஸைத் தடுக்க ஒரு மருந்து தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸிலிருந்து, பாதிக்கப்பட்ட நபர் குணமடைவது மட்டுமல்லாமல் கொரோனாவிலிருந்து குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. 

பெக்கிங் பல்கலைக்கழகத்தின் மரபியல் மையத்தின் இயக்குநர், சன்னி ஸி, இந்த குறிப்பிட்ட மருந்து விலங்குகள் மீது சோதனை செய்ததில் வெற்றிகரமான முடிவைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எலியின் மீது மருந்தை செலுத்தியபோது, வைரஸின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. அப்படியென்றால் இந்த மருந்து நல்ல பயனைத் தந்துள்ளது (therapeutic effect) என்று அர்த்தம்,” என்கிறார் ஸி.

மனித எதிர்ப்பு சக்தியிலிருக்கும் neutralising antibodies-களை இந்த மருந்து பயன்படுத்துகிறது. கொரோனாவிலிருந்து குணமடைந்த 60 நபர்களிடமிருந்து neutralising antibodies எடுத்துள்ளது ஸி-யின் குழு.

இந்த மருந்தைக் கண்டுபிடிக்க தங்கள் குழு, இரவும் பகலும் வேலை செய்ததாக சொல்லும் ஸி, “இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து மனித பயன்பாட்டிற்குத் தயாராகிவிடும். மருத்துவ பரிசோதனைகளுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் தடுக்கப்படும் என்று நம்புகிறோம்,” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சீனா, கொரோனா வைரஸுக்கு எதிராக 5 தடுப்பூசிகளை, மனிதர்கள் மீது சோதனை செய்யும் கட்டத்தில் இருக்கிறது.

அதே நேரத்தில் உலக சுகாதார அமைப்பு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது. 

இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 48 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,15,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

மருந்தில் antibodies பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. எச்.ஐ.வி, ஈபோலா உள்ளிட்ட நோய்த் தொற்றுகளுக்கும் இந்த மாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. 

சீனாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததால், அது குறித்து ஆராய்ச்சி செய்ய தங்களுக்கு அதிக நேரம் இருந்ததாக ஸி சொல்கிறார். அவர் மேலும், “கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எங்கள் மருந்து அதிகம் பயன்படும். அவர்களுக்கு நோயிலிருந்து சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை இந்த மருந்து பாதுகாப்புத் தரலாம்.

தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து இல்லாமலேயே கொரோனா பரவலை நம்மால் இந்த மருந்து மூலம் நிறுத்த முடியும் என்று நம்புகிறோம்,” என்றார் இறுதியாக.

உலகளவில் கொரோனா வைரஸுக்கு எதிரான சுமார் 100 தடுப்பு மருந்துகள் சோதனையில் இருக்கின்றன. ஆனால், நாளுக்கு நாள் பாதிப்பு தீவிரமடைந்து வருவதனால் மருந்துக்கும் அதிக தேவை ஏற்பட்டு வருகிறது. 
 

.