New Delhi: இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, வரும் 11 - 12 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறு உள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமரின் அழைப்பின் பேரில், 2 வது முறைசாரா உச்சி மாநாட்டிற்காக ஜி ஜின்பிங் வரும் அக்டோபர் 11-12 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகிறார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் நடைபெற உள்ள முறைசாரா உச்சி மாநாட்டில் இரு தலைவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த விவாதங்களை மேற்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த இருதரப்பு சந்திப்பானது, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக சீனா, புதுடெல்லிக்கும் -இஸ்லாமாபாத்துக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியது, ஐ.நா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் குறித்த அதன் சமீபத்திய குறிப்புகளை கூட சீனா கணிசமாக தவிர்த்துவிட்டது.
ஜி ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங்கை சந்தித்தது குறித்தும், சீனத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சினை பேசப்படுமா என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செங் ஷுவாங்கிடம் கேள்வி எழுப்பிய போது, காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானுமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு என்று கூறினார்.
டோக்லாமில் இரு நாடுகளின் படைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் போக்கை தொடர்ந்து, 73 நாட்கள் கழித்து, பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது.