ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா சோதனைக்கு சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் வரவழைக்கப்பட்டுள்ளது
- சீன டெஸ்ட் கிட்டுகளில் துல்லியத் தன்மை இல்லையென ராஜஸ்தான் குற்றச்சாட்டு
- 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டால் பரிசோதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
New Delhi: கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரமற்றவையாக உள்ளன என்று, தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தை ஆய்வு செய்வதாகவும், அடுத்த 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை நடத்த வேண்டாம் என்றும் மாநில அரசுகளை ஐ.சி.எம்.ஆர். கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டன. இந்த முறையில் பரிசோதனை செய்வது என்பது, ஏற்கனவே பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 5.4 சதவீதம் அளவு மட்டுமே ரேபிட் கிட்டுகள் துல்லியத்தன்மை கொண்டவையாக உள்ளன என்று ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சோதனை முறையில் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட 170 பேரிடம் ராஜஸ்தான் மருத்துவர்கள் கடந்த வெள்ளியன்று ரேபிட் டெஸ்ட் கிட்டால் பரிசோதனை செய்தனர். இதில், அவர்களுக்கு நெகடிவாக முடிவுகள் வந்தன. இது அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் இந்தியாவின் மருத்துவ உயர்மட்ட குழுவான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐ.சி.எம்.ஆர்.) சென்றுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதாகவும், 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தி பரிசோதனை நடத்த வேண்டாம் என்றும் மாநிலங்களை ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் கொரோனாவை கண்டுபிடிக்காது. ஆனால், கொரோனா தாக்கப்பட்டால் ஒருவர் உடலில் அதற்கான எதிர்ப்பு சக்திகள் உருவாக ஆரம்பித்து விடும். இதனை ஆன்டிபாடி என்பார்கள். இந்த ஆன்டிபாடி உருவாகி விட்டதா இல்லையா என்பதை ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதித்து சொல்லி விடும். ஆன்டிபாடி உருவாகி இருந்தால் பரிசோதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தமாகும்.
இதற்கிடையே டெஸ்ட் கிட்டுகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. தரம் சரிபார்ப்பு சோதனைகளை பல முறை செய்துதான் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று சீனாவின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்டால் பரிசோதனை நடத்தலாம் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் கிட்டுகள் வரவழைக்கப்பட்டு அவை பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
பல மாநிலங்களில் பி.சி.ஆர். பரிசோதனை முறை வசதிகள் இல்லை. இந்த முறையில் சளி மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும். இதில், 6 மணி நேரத்தில் முடிவுகள் தெரியவரும். ஆனால் ரேபிட் கிட்டுகளில் அதிகபட்சமாக 30 நிமிடத்தில் முடிவுகள் தெரிந்து விடும்.
ரேபிட் டெஸ்ட் கிட் ஒன்றின் விலை அதிகபட்சமாக ரூ. 600 வரை இருக்கும். இதில் இரத்த மாதிரிகள் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய பயன்படுத்தப்படும்.