இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலால் லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
New Delhi: லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், இந்திய தரப்பில், ராணுவ கர்னல் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீனா தரப்பில் 5 வீரர்கள் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வந்து கொண்டிருக்கின்றன.
இதுதொடர்பாக சீனாவின் முன்னணி அரசு பத்திரிகையான தி குளோபல் டைம்ஸின் மூத்த பத்திரிகையாளர் வாங் வென்வென் தனது ட்விட்டர் பதிவில், 'எல்லையில் நடந்த சண்டையில் சீன வீரர்கள் 5 பேர் பலியாகி உள்ளனர். 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளார்.
குளோபல் டைம்ஸின் ஆசிரியரான ஹுஜியான், 'எல்லையில் நடந்த சண்டையில் சீன வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். கர்வத்துடன் அவர்கள் நடக்க வேண்டாம். சீன ராணுவத்தை அவர்கள் தரக்குறைவாக எண்ண வேண்டாம். நாங்கள் இந்தியாவுடன் சண்டையை விரும்பவில்லை. எங்களுக்கு பயம் கிடையாது' என்று கூறியுள்ளார்.
சீனாவுக்கு எதிரான சண்டையில் இந்திய தரப்பில் ராணுவ கர்னல் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். நேற்றிரவு இந்த சண்டை லடாக் எல்லையில் நடந்திருக்கிறது.
லடாக் எல்லையில் சீனா ஊடுருவிய நிலையில் இந்தியா - சீனா இடையே ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு படைகளும் எல்லையில் பரஸ்பரம் பின்வாங்கிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் நேற்றிரவு மோதல் வெடித்திருக்கிறது. கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கியபோது மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதல் வெடித்து பலி ஏற்பட்டிருப்பது என்பது இதுவே முதன்முறையாகும்.