கடந்த மாதம் 15ம் தேதியில் இருந்து இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது.
New Delhi: லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய பகுதியில் இருந்து சீன படைகள் 2 கி.மீ. தூரம் பின்வாங்கிச் செல்வதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இன்றைக்குள் முழுவதுமாக சீன படைகள் பின்வாங்கி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேட்ரோல் பாயின்ட் 15 என்ற பகுதிதான் தற்போது பிரச்னைக்குரியதாக இருக்கிறது. நாளை கோக்ரா என்ற பகுதியில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கும் என்றும் ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 15-ம்தேதி லடாக்கின் கல்வான் ஏரி அருகே இந்திய வீரர்களை சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இதில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் காணப்பட்டது.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் உதவியோடு செயல்படும் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, லே-க்கு சென்று படைகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீனா புதிய கட்டிடங்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டது.
ஒட்டுமொத்தமாக பேச்சுவார்த்தை மூலம் அனைத்து சிக்கல்களுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் சீன படைகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் பின்வாங்கிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாக இன்று சீன படைகள் மேலும் பின்வாங்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.