கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டு யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.
ஹைலைட்ஸ்
- கோவையில் 'சின்னத்தம்பி' பிடிக்கப்பட்டது
- சில நாளுக்கு முன்னர் வேறொரு வனப்பகுதியில் சின்னத்தம்பி விடுவிக்கப்பட்டது
- சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவதைத் தவிர வழியில்லை, அமைச்சர் சீனிவாசன்
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று கூறி சென்னை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கு, இன்றே விசாரணைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டு யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி காட்டு யானை கடந்த இரு தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. இந்நிலையில் சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் செய்தியாளர்களை சந்தித்த வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘சின்னத்தம்பி யானையை கும்பி-யாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று கருத்து கூறினார். கூண்டில் அடைத்து யானையை கும்கியாக மாற்றுவதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தனது வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சின்னத்தம்பி யானை, கடந்த சில நாட்களாக கட்டுக் கடங்காமல் சுற்றி வருவதால், சோர்வடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதன் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்துதான், சின்னத்தம்பி யானை அதன் வாழ்விடத்திலேயே முழு கண்காணிப்புடன் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.