சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது
ஹைலைட்ஸ்
- சின்னத்தம்பி, டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது
- ஆனால் யானை, வனப்பகுதியிலிருந்து வெளியேறியது
- சின்னதம்பியை கும்கியாக மாற்றவும் ஆலோசிக்கப்பட்டது
சின்னத்தம்பி யானையின் நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றம், தமிழக வனத்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது.
கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த சில தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் எனும் நிலை எழுந்தது. இதனை பலரும் கண்டித்தனர். இதனால் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது. சின்னதம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் வரவழைக்கப்பட்டது. காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த கும்கி கலீமும், மாரியப்பனும் சின்னதம்பி சுற்றித்திரியும் இடத்தின் அருகே நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த யானைகளுடன் சின்னத்தம்பி விளையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படி சின்னத்தம்பி குறித்து தமிழக அளவில் பெரிய விவாதம் கிளம்பியுள்ள நிலையில், அதன் நிலை குறித்து அறிய வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம், ‘வரும் 12 ஆம் தேதிக்குள் தமிழக வனத் துறை சின்னத்தம்பி யானையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.