உடுமலைப்பேட்டையில் சின்னதம்பி யானையானது தொடர்ந்து 4-வது நாளாக முகாமிட்டுள்ள நிலையில் அங்குள்ள கரும்புகளை சாப்பிட்டும், கும்கி யானைகளுடன் விளையாடியும் பொழுதை கழித்து வருகிறது.
கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த முன்று தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் எனும் நிலை எழுந்தது. இதனை பலரும் கண்டித்தனர். இதனால் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது. சின்னதம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் வரவழைக்கப்பட்டது. காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த கும்கி கலீமும், மாரியப்பனும் சின்னதம்பி சுற்றித்திரியும் இடத்தின் அருகே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் சின்னதம்பி, கும்கி கலீம் அருகே வந்துள்ளது. அப்போது, கும்கி கலீம் சின்னதம்பியை லேசாக தாக்கியது. சிறிது நேரத்தில் சின்னதம்பி, கும்கி கலீமுடன் நட்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக கலீமும், சின்னதம்பியும் நெருங்கிய நண்பர்களாக மாறி கொஞ்சி விளையாடி வருகின்றன. இதனால், சின்னதம்பியை வனத்திற்குள் அனுப்ப முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.