இந்த ஒப்பந்தத்துக்கான இடைத்தரகராக செயல்பட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிச்சல்
ஹைலைட்ஸ்
- 2007-ல் ஆகஸ்டா வெஸ்ட்லேண்டு ஒப்பந்தம் போடப்பட்டது
- 12 சொகுசு ஹெலிகாப்ட்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது
- 2014-ல் மத்திய அரசு, ஒப்பந்தத்தை ரத்து செய்தது
New Delhi: இந்தியாவின் முக்கிய புள்ளிகள் பயணம் செய்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்டு நிறுவனத்திடமிருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு, ஒரு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்துக்கான இடைத்தரகராக செயல்பட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிச்சல்.
ஆனால், அகஸ்டா வெஸ்ட்லேண்டு நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஃபின்மெக்கனிக்கா லஞ்சம் கொடுக்கும் புகாரில் சிக்கியவுடன், அதனுடனான ஒப்பந்தத்தை, 2014-ல் ரத்து செய்தது மத்திய அரசு. தொடர்ந்து இது குறித்து சிபிஐ-யும் விசாரித்து வருகிறது. இடைத் தரகரான மிச்சலையும் இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்துக் கட்ட முயற்சியும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார் மிச்சல். தொடர்ந்து அவர் மீது வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் தான் இன்று நாடு கடத்த உத்தரவு பிறப்பித்தது துபாய் நீதிமன்றம்.
அகஸ்டா வெஸ்ட்லேண்டு விவகாரத்தில் சம்பந்தம் உடையதாக குற்றம் சாட்டி முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து ஒப்பந்தம் போட்ட காங்கிரஸ் அரசு, ‘அகஸ்டா வெஸ்ட்லேண்டு குறித்து புகார் வந்தவுடன் இந்த ஒப்பந்த்தை ரத்து செய்துவிட்டோம். மேலும் இது தொடர்பாக சிபிஐ-யும் விசாரணை நடத்த உத்தரவிட்டோம்’ என்று விளக்கம் அளித்துள்ளது.
அதே நேரத்தில மிச்சலின் வழக்கறிஞர், ‘கிரிமினல் வழக்கிலிருந்து தப்பிக்க, சோனியா காந்தியைக் காட்டிக் கொடுக்கச் சொல்லி சிபிஐ பணித்தது’ என்று பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது சிபிஐ. மேலும் துபாய் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.