This Article is From Jun 11, 2020

கொலம்பஸ் சிலையின் தலையை உடைத்தெறிந்த அமெரிக்கப் போராட்டக்காரர்கள்!

அதே போல மியாமி நகரத்திலும் கொலம்பஸ் சிலை தகர்க்கப்பட்டது. முன்னதாக வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள கொலம்பஸ் சிலை மக்கள் தகர்த்து ஏரிக்குள் கொண்டு வீசியுள்ளனர்.

கொலம்பஸ் சிலையின் தலையை உடைத்தெறிந்த அமெரிக்கப் போராட்டக்காரர்கள்!

கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிதைக்கப்பட்ட சிலையை அகற்ற தொழிலாளர்கள் முயற்சிக்கின்றனர்

சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரின் மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த நபர் வெள்ளை இன காவல்துறை அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ளன. தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இன ரீதியான தாக்குதலுக்கு எதிராக தற்போது கறுப்பு வெள்ளை இன மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் போஸ்டனில் உள்ள கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலையின் தலை தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. காலணிய ஆதிக்கத்தின் அடிமைத்தனத்தினை நினைவுகூரும் சிற்பங்கள் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் தகர்த்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த சிலை தகர்ப்பும் நடந்துள்ளது.

அதே போல மியாமி நகரத்திலும் கொலம்பஸ் சிலை தகர்க்கப்பட்டது. முன்னதாக வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள கொலம்பஸ் சிலையை மக்கள் தகர்த்து ஏரிக்குள் கொண்டு வீசியுள்ளனர்.

1492 காலக்கட்டத்தில் கொலம்பஸ் ஒரு புதிய உலகத்தினை கண்டுபிடித்ததாக அமெரிக்க பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவை தேடி வந்த அவர் இந்தியா என நினைத்து அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நீண்ட காலமாக இன வெறிக்கு எதிரான கொலைகள் தொடர்ந்து நடந்தும், அதை ஊக்குவிக்கும் செயல்களும் தொடர்ந்து அரங்கேறியும் வருகின்றன.

அமெரிக்காவின் பல சர்ச்சைக்குரிய சிலைகளைப்போலவே கொலம்பஸ் சிலையும் போஸ்டன் நகர மையத்தில் இருந்து வந்தது. அது தற்போது மக்களால் தகர்த்தப்பட்டிருக்கிறது.

நேற்று இரவு காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் ஏ.எஃப்.பி(AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்கிற பாதாகைகளை தாங்கி போராட்டம் நடத்தும் மக்கள் இந்த பாணியை கையாள்வது நல்ல விஷயம்“ என பெயர் குறிப்பிடப்பட விரும்பாத நபர் ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் "இந்த நாட்டில் கறுப்பின மக்களைப் போலவே, பழங்குடியின மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் தற்போது மிகவும் வலுவடைந்து வருகிறது.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1937 வருடத்திலிருந்து அக்டோபர் மாதத்தில் ஒரு தினத்தினை கொலம்பஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை மக்கள் பழங்குடி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக கடைப்பிடிக்கின்றனர்.

போஸ்டனின் மேயர் மார்டி வால்ஷ், கொலம்பஸ் சிலையின் தலை துண்டிக்கப்பட்டதை கண்டித்தார். சிலை அகற்றப்படும் என்றும், ஆனால் இது தற்காலிகமானதா அல்லது நிரந்தமானதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னமும் தெரியவில்லை.

அமெரிக்கா மட்டுமல்லாது மேலும் பல மேற்கத்திய நாடுகளில் கறுப்பின மக்களின் உரிமைக்கு ஆதரவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் பிரிஸ்டலில் மக்கள் அடிமை வணிகரின் சிலையை தகர்த்து அருகில் உள்ள துறைமுக பகுதியில் வீசியெறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.