பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைவிதிப்பது வேலையிழப்புக்கு வித்திடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
New Delhi: ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தடைப் பட்டியலில் குளிர் பானங்களுக்காக பயன்படுத்தப்படும் பாட்டில்கள், தெர்மாகோல், சிகரெட் பட்ஸ்கள் உள்ளிட்டவை இருக்கும் என்று தெரிகிறது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடைவிதிக்க மத்திய அரசு முனைப்புக் காட்டி வந்தாலும், அதற்கான காலக்கெடுவை இதுவரை நிர்ணயிக்கவில்லை. அதே நேரத்தில் பகுதி பகுதியாக பிளாஸ்டிக் தடையானது அமல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தடைப் பட்டியலில் இருக்கும் பொருட்களில், பிளாஸ்டிக் பைகள் (50 மைக்ரான்ஸுக்கும் குறைவாக உள்ளவை), நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ரா, ஃபோம் செய்யப்பட்ட கப், பவல், தட்டு, பிளாஸ்டிக் லாமினேட் செய்யப்பட்ட பவல் மற்றும் தட்டுகள், சிறிய பிளாஸ்டிக் கப், பலூன்கள், சிகரெட் துண்டுகள், குளிர்பானங்களுக்குப் பயன்படுத்தப்படும் புட்டிகள், சாலையோர பேனர்கள் (100 மைக்ரான்களுக்கும் குறைவானவை) உள்ளிட்டவை அடங்கும்.
நாட்டின் மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகள், வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதற்கான திட்டத்தை தீட்ட உள்ளன. தற்போது தடை செய்யப்பட உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று என்ன என்பது குறித்து பிளாஸ்டி உற்பத்தியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு.
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைவிதிப்பது வேலையிழப்புக்கு வித்திடும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வரும் பொருட்கள் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று கூறுகிறார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி, பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்படும் என்று இந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.