பொது சொத்துகளை பாதுகாப்பது குடிமக்களின் பொறுப்பு: பிரதமர் மோடி
Lucknow: நாடுமுழுவதும் கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நடந்த வரும் போராட்டத்தின் போது ஏற்படும் வன்முறையில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்கள் தங்கள் நடவடிக்கைகள் "நல்லதா இல்லையா" என்பதை ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
லக்னோவில் அமைய உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அடிக்கால் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "உத்தர பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்து, எதிர்கால தலைமுறையினருக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் பொது சொத்துக்களை அழித்தது சரிதானா, இல்லையா என்று தங்களைக் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலுக்கு உரிமை உண்டு என்பதை மனதில் கொள்ளுமாறு போராட்டக்காரர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், "பாதுகாப்பான சூழலைப் பெறுவது நமது உரிமை, நமது பாதுகாப்புக்கு பொறுப்பான சட்டம் ஒழுங்கு இயந்திரங்களை மதிக்க வேண்டியது நமது கடமையாகும் என்று அவர் கூறினார்.
சுதந்திரத்திற்கு பின்னர் நாமே நமது உரிமைகளை வலியுறுத்தினோம். ஆனால், அதே நேரத்தில் நமது கடமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை உத்தர பிரதேச மக்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன் என்றார். மேலும், சிறப்பான பணியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியதை தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறைகள் நடந்து வருகின்றன. அப்படி, சில மோதல்களை உத்தரபிரதேசத்திலும் நடந்தது. அங்கு இதுவரை நடந்த வன்முறை சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களைத் தணிக்க மாநில காவல்துறையினர் ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியதையடுத்து, அதிகாரிகள் இப்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனிடையே, தனது உரையில், பிரதமர் மோடி தனது அரசாங்கம் பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை அமைதியான முறையில் எவ்வாறு தீர்த்தது என்பதை மேற்கோள் காட்டி பேசினார். "ராம் ஜென்மபூமி பிரச்சினை அமைதியாக தீர்க்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பரிவு 370வது ரத்து செய்தது உள்ளிட்டவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.
"நமது உரிமைகள் மற்றும் கடமைகளை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். நல்ல கல்வியை பெறுவது நமது உரிமை என்றாலும், ஆசிரியர்களை மதிக்க வேண்டும், நமது கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் நமக்கு ஒரு கடமை இருக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஒரு போராட்டம் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் முடிவடைந்ததை அடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய அளவில் சென்றது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து, போராட்டங்கள் நடந்து வருகிறது.