This Article is From Dec 14, 2019

வடகிழக்கில் நீடிக்கும் போராட்டம்: குடிமக்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை!

Citizenship (Amendment) Bill: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது.

அசாம் மாநிலத்திற்கு பயணம் செய்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என அமெரிக்க ஆலோசகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • Advisories caution against violence, curb on internet
  • Travellers should monitor the local media, UK advisory said
  • Protests against the law erupted across the Northeast earlier this week
New Delhi:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தீவிரப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், எந்தவொரு நோக்கத்திற்காக இப்பகுதிகளுக்கு செல்லும்போதும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு பயண ஆலோசகங்கள் தங்கள் குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. 

வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் போராட்டக்காரர்கள் சாலை மற்றும் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர்.

கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பெல்டங்கா ரயில் நிலையத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல், மூன்று நாட்கள் வன்முறைப் போராட்டங்களுக்குப் பின்னர் திரிபுராவில் இன்று அமைதி திரும்பியுள்ளது. ஆனால், இந்த அமைதி நிலை தொடர்ந்து நீடிக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுராவில் வன்முறை எதிர்ப்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. 

கவுஹாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாமில் 10 மாவட்டங்களில் மொபைல், இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என இங்கிலாந்து ஆலோசகம் தெரிவித்துள்ளது. 

மேலும், கட்டாயம் பயணம் செய்ய வேண்டிய தேவை இருந்தால் சாத்தியமான பயணிகள் சமீபத்திய தகவல்களுக்கு உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல் அமெரிக்க ஆலோசகம் வெளியிட்ட அறிக்கையும் இதை ஒத்ததாக இருந்தது. கூடுதல் குறிப்பாக அசாம் மாநிலத்திற்கு பயணம் செய்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. 

ஆளும் பாஜக அரசு இந்த வார தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மூலம் முன்வைத்தபோது, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. 

கவுஹாத்தி கடுமையான பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியது. ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கு உத்தரவுகளை மீறி, போலீசாருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டனர். மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களுக்கு கடுமையான சேதன் விளைவித்தனர். இதனிடையே, வியாழக்கிழமை இரவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, அசாம் மாநிலம் கவுஹாத்தியில் டிசம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகை தருவதாக இருந்தது. எனினும், அசாமில் தொடர்ந்து வரும் போராட்டத்தில் காரணமாக ஷின்சோ அபே பங்கேற்க இருந்த மாநாடு ஒத்திவைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

.