நாட்டில் நடந்து வரும் CAA-க்கு எதிரான போரட்டங்களில் மிக முக்கிய நபராக சந்திரசகேர் ஆசாத் பார்க்கப்படுகிறார்.
Hyderabad/ New Delhi: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் நேற்று மாலை ஹைதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, அவர் இன்று காலை டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும், போலீசார் தனது ஆதரவாளர்களை தாக்கியதாகவும் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சந்திரசேகர் ஆசாத் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, தெலுங்கானாவில் சர்வாதிகாரம் அதன் உச்சத்தில் உள்ளது. . முதலில் எனது ஆதரவாளர்கள் லத்தியால் தாக்கப்பட்டனர், பின்னர் நான் கைது செய்யப்பட்டேன். தற்போது காவலர்கள் என்னை ஹைதராபாத் விமான நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
அவர்கள் என்னை டெல்லி அனுப்பி வைக்க உள்ளனர் என்று அவர் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டர் பதிவை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அலுவலகத்திற்கும் அவர் டேக் செய்துள்ளார். மேலும், பகுஜன் சமாஜ் இந்த அவமானப்படுத்தலை ஒரு போதும் மறக்காது என்றும் அவர் கூறிய அவர், விரைவில் நான் திரும்பி வருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது ஒரு சில ஆதரவாளர்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஹைதராபாத்தின் மெஹ்திபட்னத்தில் உள்ள கிரிஸ்டல் கார்டனில் நடைபெறும் சிஏஏவுக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு உரையாற்ற சென்று கொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஹைதராபாத் காவல் ஆனையாளர் அஞ்சனி குமார் என்டிடிவியிடம் கூறியதாவது, 33 வயதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், சட்டப்பிரிவு 151ன் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். ஏனெனில் அவர் கலந்து கொள்ள இருந்த பொது போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் இந்த குறிப்பிட்ட விதிமுறை, பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எவரையும் தடுப்பு காவலில் வைக்கவோ அல்லது கைது செய்யவோ அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த மாதம் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களை வன்முறைக்குத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசாத், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, ஜன.16ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது.
இதைத்தொடர்ந்து, அவர் ஜாமினில் வெளிவந்து 10 நாட்கள் கடந்த நிலையில் ஹைதராபாத் போலீசார் அவரை மீண்டும் கைதுசெய்துள்ளனர். நாட்டில் நடந்து வரும் CAA-க்கு எதிரான போரட்டங்களில் மிக முக்கிய நபராக சந்திரசகேர் ஆசாத் பார்க்கப்படுகிறார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பின்பும், சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை அவர் கடுமையாக எதிர்த்து வருகிறார்.