ராவத், ராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் தலைவர் (சிடிஎஸ்) ஆவார் என்று சொல்லப்படுகிறது. (File)
ஹைலைட்ஸ்
- வன்முறையைக் கட்டவிழ்த்து விட தலைவர்கள் துணை நிற்பது சரியல்ல: Army chief
- டிசம்பர் 31 உடன் பணி ஓய்வு பெறுகிளார் தளபதி ராவத்
- தளபதி ராவத்தின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது
New Delhi: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளதை விமர்சித்துள்ளார் இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத். ஒரு ராணுவத் தளபதி அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்கிற மரபை அவர் மீறியுள்ளதால், அவரின் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
“தலைமை என்பது தலைமை தாங்கி வழி நடத்துவது ஆகும். நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால், அனைவரும் முன்னோக்கி நகர்வார்கள். மக்களை சரியான பாதையில் வழிநடத்துபவர்களே தலைவர்கள். மக்களை தவறாக வழி நடத்துவோர் தலைவர் அல்ல. பல பல்கலைக்கழங்களிலும் கல்லூரிகளிலும் அதுதான் நடந்து வருகிறது. நம் நாட்டின் நகரங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட தலைவர்கள் வழிநடத்துவது சரியல்ல. அது தலைமைப் பொறுப்புக்கு அழகல்ல,” என்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியுள்ளார் தளபதி ராவத்.
தேசிய அளவில் பல இடங்களில் நடக்கும் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் பற்றி, வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் தளபதி ராவத் பேசியுள்ளார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகிள்ளனர். பல நேரங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்த உடன், போலீஸ் தரப்பு, மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
நேற்று பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்துப் பேசுகையில், “உத்தர பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் நான் ஒன்றைச் சொல்கிறேன். வீட்டுக்குச் சென்று நீங்கள் செய்தது சரியா தவறா என்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் எதிர்கால தலைமுறைக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியுள்ளீர்கள்,” என்று பேசினார்.
தளபதி ராவத் சொன்ன கருத்து பற்றி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பிரிஜேஷ் காலப்பா, “ராணுவத் தளபதி குடியுரிமைச் சட்டப் போராட்டத்துக்கு எதிராக பேசியுள்ளது சட்ட சாசனத்துக்கு எதிரானது. இன்று அரசியல் விவகாரங்கள் பற்றி பேசும் ராணுவத் தளபதி, நாளை, ராணுவப் புரட்சி செய்யவும் வாய்ப்புள்ளது,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“தலைமை என்பது ஒருவரின் உயரமறிந்து செயல்படுவது. நீங்கள் தலைமை வகிக்கும் அமைப்பின் மாண்பைக் காக்கும் வகையில் நடந்து கொள்வது,” என்று ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி, தளபதி ராவத் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.
தளபதி ராவத், பணி ஓய்வு பெற்ற பிறகு லெஃப்டெனென்ட் ஜெனரல், மனோஜ் முகுந்து நரவானே, அடுத்த ராணுவத் தளபதியாக பதவியேற்பார்.
ராவத், ராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் தலைவர் (சிடிஎஸ்) ஆவார் என்று சொல்லப்படுகிறது. இந்தப் புதிய பதவியின் மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சருக்குத் தலைமை ஆலோசகராக அவர் இருப்பார் என சொல்லப்படுகிறது. வடக்கு ராணுவத கமாண்டர் ரன்பிர் சிங்கிற்கும் சிடிஎஸ் பதவி கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.