குடியுரிமை சட்ட திருத்தத்தை மாயாவதி தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதனை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் ஆதரவு தெரிவித்தார். அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
பகுஜன் சமாஜ் என்பது ஒழுக்கம் மிக்க கட்சி. இங்கு ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாவிட்டால் அவர் எம்.பி., எம்.எல்.ஏ. என யாராக இருந்தாலும் சரி. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பதேரியா தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராமாபாய் பரிகார் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்ததால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.
குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் முதன்முறையாக கூறிய கட்சிகளில் பகுஜன் சமாஜும் ஒன்று. எங்களது கட்சி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது. குடியரசு தலைவர் இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இருந்தபோதிலும் இந்த ராமாபாய் பரிகார் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பதிவில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. ராமாபாய் கட்சிக்கு எதிராக செயல்பட்டபோது சில முறை எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. முதன்முறையாக மத பாகுபாடு அடிப்படையில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேச நாடுகளில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் அந்நாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை சட்ட திருத்தம் உதவும் என்று மத்திய அரசு கூறுகிறது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பது அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்று கூறி போராட்டங்கள் நடக்கின்றன.
கடந்த வாரம் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சர்ச்சைக்குரிய சட்டம் மீது இருக்கும் பிடிவாதத்தை கைவிட வேண்டும் என்றும், சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார்.
கடந்த வாரம் மாயாவதியின் கட்சியை சேர்ந்தவர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, இந்த சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21-க்கு எதிரானது என்று கூறினர். இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், கடந்த 15-ம்தேதி ஜாமியா மில்லியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.