This Article is From Jan 13, 2020

குடியுரிமை சட்ட திருத்தம், NRC குறித்து விவாதிக்க நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம்!!

Opposition Meet On NRC, Citizenship Amendment Act: எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன என்பதை தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமை சட்ட திருத்தம், NRC குறித்து விவாதிக்க நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம்!!

நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

New Delhi:

குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன என்பதை தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அப்போது இடதுசாரிகளுக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி தான், எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. உள்ளிட்டவைகளுக்கு எதிராக நான்தான் போராட்டத்தை தொடங்கினேன். ஆனால், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் செய்வதை ஏற்க முடியாது. அது போராட்டம் அல்ல வன்முறை' என்று கூறினார்.

இதேபோன்று மாயாவதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா உள்ளிட்டோரை விமர்சித்திருந்தார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பச்சிளம் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரை விட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த மாயாவதி, காங்கிரஸ் கட்சியின் பெண் பொதுச் செயலாளர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்று உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது என்பதும் பிரியங்காவின் அரசியல் நாடகம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

நேற்றைய தினம் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்த சோனியா காந்தி, இது மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் சட்டம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதனை நாட்டு மக்களும், மாணவர்களும் நன்றாக புரிந்து வைத்திருப்பதாக அவர் கூறினார்.

இதற்கு முன்பாக குடியுரிமை சட்ட திருத்தம் குறீத்து காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. குடியுரிமை சட்ட திருத்தத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேடு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஜாமியா மில்லியாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர். இதன்பின்னர்தான் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கான எதிர்ப்பு தீவிரம் அடைந்தது. அதற்கு முன்பாக வெவ்வேறு கட்சிகள் நடத்திய போராட்டங்கள் பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டன.

போராட்டங்களை காங்கிரஸ் கட்சி வன்முறையாக மாற்றி வருகிறது என்று பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தம் அல்லது தேசிய குடிமக்கள் பதிவேட்டினை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

.