This Article is From Dec 28, 2019

தடுத்து நிறுத்திய உ.பி. போலீசார்! பைக்கில் சென்று அதிரவைத்த பிரியங்கா காந்தி!!

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடிய ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது தனது கழுத்தை பிடித்து இறுக்கியதாக உத்தரப்பிரதேச போலீசார் மீது பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

போலீசார் வாகனத்தை நிறுத்தியதால், பைக்கில் செல்ல நேர்ந்ததாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Lucknow:

உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பைக்கில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடிய ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது தனது கழுத்தை பிடித்து இறுக்கியதாக உத்தரப்பிரதேச போலீசார் மீது பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

76 வயதாகும் தாராபுரி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முயன்றபோது, போலீசார் பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காரிலிருந்து இறங்கி நடந்து சென்ற பிரியங்கா பின்னர் கட்சியை சேர்ந்த ஒருவரின் பைக்கில் சென்றார். இதன் பின்னரும் மற்றொரு இடத்தில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

அதன் பின்னர், தாராபுரியின் வீடு இருந்த 2 கிலோ மீட்டர் தூரத்தை பிரியங்கா காந்தி நடந்து சென்றார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'தாராபுரியின் வீட்டாரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முயன்றபோது போலீசார் என்னை தடுத்து நிறுத்தினார்கள். எனது கழுத்தை நெறிக்க முயன்றனர். இதன்பின்னர் என்னைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்து கட்சி தொண்டர் ஒருவரின் பைக்கில் ஏறிச் சென்றேன். அதன்பின்னர் நடந்து, தாராபுரியின் வீட்டை அடைந்தேன்' என்று அவர் கூறியுள்ளார். 
 

பிரியங்கா காந்தி, தனது கட்சி தொண்டர்களுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அவர் தனது ஆதரவாளர்கள் செல்லும்போது, வழியில் பெண் போலீஸ் ஒருவரை அவரை மறிக்கிறார். சிறிது நேரம் தள்ளு முள்ளு நடக்கிறது. பின்னர் நடந்து செல்வதற்கு பிரியங்கா காந்தி அனுமதிக்கப்படுகிறார். 

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'நான் பெண் போலீசாரால் சூழப்பட்டேன். அவர்களில் ஒருவர் எனது கழுத்தை பிடித்து நெறித்தார்கள். மற்றொரு பெண் போலீஸ் என்னை தள்ளி விட்டார். நான் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்டேன். பெண் அதிகாரி என் கழுத்தை பிடித்து தள்ளினார். இருப்பினும் நான் உறுதியாக இருந்தேன். போலீசால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படும் ஒவ்வொரு குடிமகனுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். இது என் சத்தியாக்கிரகம்' என்று தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தின் தன்னை கைது செய்ய போலீசாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று பிரியங்கா கூறியுள்ளார்.'நான் என்ன சொல்வது... சாலைக்கு நடுவே என்னை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறு செய்வதற்கு எந்த காரணமும் கிடையாது. அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்' என்றார்.

முன்னதாக உத்தரப்பிரதேச தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி தொண்டர் ஒருவர் பிரியங்கா காந்தியை சந்திக்க முயன்றார். அவரிடம் பிரியங்கா காந்தி பேசினார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி ஒரு புற்று நோயாளி ஆவார். அவர் லக்னோவில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடன் சேர்த்து சுமார் 1,113 பேர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைதாகி இருந்தனர். அவர்களில் 498 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 148 பேர் மீரட்டை சேர்ந்தவர்கள். பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் தங்களது சொத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். 
 

(With inputs from Agencies)

.