அந்த வீடியோவில், போலீசார் ஒருவர் வன்முறை நடக்கும் இடத்தில் போராட்டக்காரர்களை நோக்கி கையில் துப்பாக்கியை நீட்டிய படி ஓடுகிறார்.
Lucknow:
உத்தர பிரதேசத்தில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட பெரும் வன்முறை காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் துப்பாக்கி குண்டு காயங்களாலே உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. எனினும், போலீசார் தரப்பில் இதுவரை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடவில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், போலீசார் கையில் துப்பாக்கிகளுடன் இருப்பது வீடியோ ஆதாரத்தில் தெரியவந்துள்ளது.
கான்பூரில் இந்த வன்முறை சம்பவம் நடந்த மறுதினம் போலீசார் கை துப்பாக்கிகளை கொண்டு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளது. எனினும், உத்தர பிரதேசத்தில் யாரும் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகவில்லை என்று காவல்துறை தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்ட பின்னரே இந்த வீடியோக்கள் வெளிவந்துள்ளன.
உத்தர பிரதேசத்தின் நகர பகுதியான கான்பூரில் நேற்று நடந்த போராட்டத்திலும் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதில் போலீஸ் பூத்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அந்த வீடியோவில், போலீசார் ஒருவர் தலைகவசம், பாதுகாப்பு கவசங்கள் அணிந்த படி வன்முறை நடந்த சம்பவத்தில் போராட்டக்காரர்களை நோக்கி கையில் துப்பாக்கியை தூக்கிய படி ஓடுகிறார். அவர் ஒரு மறைவான பகுதிக்கு சென்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபடுகிறார்.
உத்தர பிரதேச தலைமை காவல் அதிகாரி ஓ.பி.சிங் கூறும்போது, உயிரிழந்தவர்கள் யாரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகவில்லை. போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒரு துப்பாக்கி தோட்டாவை கூட நாங்கள் பயன்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் 13 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த பட்டியலில் சஹரன்பூர், தியோபந்த், ஷாம்லி, முசாபர்நகர், மீரட், காஜியாபாத், ஹப்பூர், சம்பல், அலிகார், பஹ்ரைச், ஃபெரோசாபாத், கான்பூர், படோஹி மற்றும் கோரக்பூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். மாநிலத்தின் சில பகுதிகள் தடை உத்தரவுகளின் கீழ் உள்ளன மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 124 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.