This Article is From Dec 23, 2019

CAA Potest: வித்தியாசமான முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்த ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி!

Citizenship (Amendment) Act: முன்னதாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தனர் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி.

போராட்டத்தில் அனைவரும் இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் முன்னுரையை வாசித்து, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 

New Delhi:

Citizenship (Amendment) Act: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இன்று டெல்லியில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவிட ராஜ்காட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அனைவரும் இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் முன்னுரையை வாசித்து, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 

காங்கிரஸின் ‘சத்யகிரகம்' என்றழைக்கப்படும் இந்தப் போராட்டத்தில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

“பிஜ்னோரைச் சேர்ந்த ஒரு அன்னை சொன்னார், ‘என் மகன் இந்த நாட்டிற்காக உயிரிழந்தான்' என்று. இந்தப் புரட்சிக்காக உயிர் விட்ட நபர்களின் பெயர் மீது ஆணையிட்டுச் சொல்கிறோம், சட்ட சாசனத்தை நாங்கள் காப்போம்,” என்று பொதுக் கூட்டத்தில் முழங்கினார் பிரியங்கா காந்தி. 

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ். 

அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள். 

நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் மாணவர் போராட்டங்களை ஆதரித்துள்ள காங்கிரஸ், மத்திய அரசு ‘தேவையில்லாமல் போலீஸ் படை கொண்டு ஆராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடக் கூடாது' என்று எச்சரித்துள்ளது. 

முன்னதாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தனர் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி.

ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் அன்பான மாணவர்களே, இந்தியராக உணர்ந்தால் மட்டும் போதாது இது போன்ற சமயங்களில் தான் இந்தியர் என்பதைக் காட்டுவது மிக முக்கியம். இந்தியாவை வெறுப்பால் அழிக்க அனுமதிக்காதீர்கள். இன்று மதியம் 3 மணிக்கு ராஜ்காட்டில் என்னுடன் இணைந்து போராட வாருங்கள். மோடி -அமித் ஷா இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்து போராட வாருங்கள்' என்று அழைப்பு விடுத்திருந்தார்.

பிரியங்காவும், ‘சட்ட சாசனம்தான் நமது பலம். பிரித்தாளும் அதிகாரத்திடமிருந்து நாம் தேசத்தைக் காக்க வேண்டும். அரசியல் சட்ட சாசனத்தைப் படிக்கும் நிகழ்வில் என்னோடு கலந்து கொள்ளுங்கள்,' என்று இந்தியில் ட்வீட்டினார். 

.