திருநெல்வேலியில் நடந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
Chennai: பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேச்சாளர் நெல்லை கண்ணனை நேற்றிரவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள பெரம்பலூரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேயில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொண்டு நெல்லை கண்ணன் பேசிய உரை ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், நெல்லை கண்ணன் இரு சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவது போல் பேசியது, அமைதியை கெடுக்கும் நோக்குடன் அவமரியாதையாக பேசியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முஸ்லிம்கள் ஏன் இன்னும் செயல்படவிலை என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நெல்லை கண்ணனை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக அவரை அழைத்துச் செல்ல போலீஸ் குழுவினர் செவ்வாய்க்கிழமையன்று நெல்லை கண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது, அவர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்ற கருத்துக்கள் "பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் உயிருக்கு வெளிப்படையான அச்சுறுத்தல்" என்று கூறி பாஜகவின் நெல்லை மாவட்டத் தலைவர் தயா சங்கர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், பாஜக பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், தமிழக தலைமை காவலருக்கு தனி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், வகுப்புவாத மோதல்களைத் தூண்டக்கூடிய வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் கருத்துக்களை வழங்கியதற்காக பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது சர்ச்சைக்குரிய உரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் எதிராகவும் நெல்லை கண்ணன் இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதேபோல், அதிமுக தரப்பில் இருந்தும் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுக்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.