ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையமும், “சிஏஏ இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகவும், அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதாகவும் உள்ளது,” என்றது
New Delhi: சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல தரப்பினரும் கருத்து சொல்லி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஈஓ-வான சத்ய நாதெல்லாவும், சட்டம் குறித்தான தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடக்கும் விஷயங்கள் வருத்தத்தைக் கொடுக்கின்றன. மிகவும் தவறானது… வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் ஒருவர், மிகப் பெரிய சாதனையைப் புரிய வேண்டும் என நான் விரும்புகிறேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓவாக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று கருத்து தெரிவித்துள்ளார் நாதெல்லா.
அதைத் தொடர்ந்து, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து, நாதெல்லாவின் கருத்தை விரிவாக பதிவிட்டது. “ஒவ்வொரு தேசமும் தனது எல்லையை தீர்மானித்து, தேசப் பாதுகாப்பை முன்னிருத்தி, அகதிகளுக்கான சட்டங்களை வரையறுக்க வேண்டும். ஒரு ஜனநாயகத்தில் அதன் மக்களும், அரசும் இந்த எல்லைக்குள் எப்படி செயல்படலாம் என்பதை விவாதித்து முடிவெடுப்பார்கள். நான் இந்திய கலாசாரத்தால் பேணப்பட்டு, இந்தியாவின் பலதரப்பட்ட கலாசாரங்களுக்கு இடையில் வளர்ந்தவன். அமெரிக்காவில் குடிபெயர்ந்த அனுபவத்தைப் பெற்றவன். என்னைப் பொறுத்தவரையில், குடிபெயர்ந்த ஒருவர் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ஆரம்பித்தோ, பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்தியோ இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்றும் சூழல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்று நாதெல்லா குறிப்பிட்டுள்ளார்.
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து மத ஒடுக்குமுறையால் இந்தியாவுக்கு வந்த, முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது என்றும் மதப் பாகுபாடு காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன.
சிஏஏவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியும் இணைந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மாறும் என்று இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை கொடுக்க உதவும் என்கிறது மத்திய அரசு தரப்பு.
நாதெல்லாவின் கருத்துகளை வரவேற்றுள்ள பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா, “சத்ய நாதெல்லா இப்படிப்பட்ட கருத்தை சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதைப் போன்ற கருத்தை நம் நாட்டின் ஐடி துறை முதலாளிகள் முதலில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். இப்போது கூட சொல்லலாம்,” என்றுள்ளார்.
கடந்த மாதம் ராமச்சந்திர குகா, பெங்களூருவில் சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்று கைதானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கூகுள், உபர், அமேசான், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த 150 இந்திய நிரந்தர ஊழியர்கள் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக கடிதம் எழுதினார்கள். இரு நடவடிக்கைகளையும் ‘பாசிச' நடைமுறை என்று அவர்கள் விமர்சித்திருந்தார்கள்.
அதேபோல ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையமும், “சிஏஏ இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகவும், அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதாகவும் உள்ளது,” என்றது.
(With inputs from PTI)