This Article is From Dec 10, 2019

எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா: 10 Points!

The Citizenship Amendment Bill - காங்கிரஸ் தரப்போ, “இந்த மசோதா சட்ட சாசனத்துக்கு எதிரானது, சட்ட சாசன மாண்புக்கு எதிரானது, பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானது,” என்று கூறியுள்ளது.

சிவசேனா, முன்னதாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், மசோதாவின் வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்தது. 

New Delhi:

12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. 311 லோக்சபா உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க, 80 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசும்போது, “0.001 சதவிகிதம் கூட இது இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல,” என்று முழங்கினார். மேலும் அவர் காங்கிரஸ் எதிர்ப்பிற்கு, “1947 ஆம் ஆண்டு இந்த நாட்டை மத ரீதியில் பிரித்தது காங்கிரஸ்தான். அப்படி இருக்கையில் இந்த மசோதா எப்படி பாரபட்சமானது என்று அக்கட்சி சொல்லலாம்,” என்றார். இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

10 Points:

1.லோக்சபாவில் இந்த மசோதா ஒப்புதல் பெற்ற சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி, “திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, 2019, லோக்சபாவில் விவாதங்களுக்குப் பிறகு ஒப்புதல் பெற்றது மகிழ்ச்சி. இந்த மசோதாவுக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிகளுக்கும் நன்றி. இந்தியா பல ஆண்டுகளாக நம்பும் மனித மாண்புகளின் அடிப்படையிலேயே இந்த மசோதா இருக்கிறது,” என்று ட்வீட்டினார். 

2.முன்னதாக மசோதா குறித்து அமித்ஷா பேசுகையில், “நாட்டில் இருக்கும் முஸ்லிம்களோ, வடகிழக்கைச் சேர்ந்த நபர்களோ இந்த மசோதா குறித்து கவலையடைய வேண்டாம். காரணம், அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மையின அகதிகளுக்காகத்தான் இது வரையறுக்கப்பட்டுள்ளது. அதைப் போன்ற பல கோடி நபர்கள், வீடு, கல்வி மற்றும் சுகாதாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்,” என்று கூறினார். 

3.குடியுரிமை மசோதா, முஸ்லிம்களுக்கு எதிரானது என்கின்ற வாதத்தை நிராகரித்த அமித்ஷா, “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படாததற்குக் காரணம், அவர்கள் அந்த நாட்டில் சிறுபான்மையினர் கிடையாது என்பதால்தான்,” என்று விளக்கமளித்தார். 

4.மத்திய அரசு இந்தியாவை ஒரு ‘இந்து பாகிஸ்தானாக' மாற்ற முயல்கிறது என்ற கூற்றையும் மறுத்த அமித்ஷா, “அது மிகவும் தவறான வாதம். இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 9.8 சதவிகிதத்தில் இருந்து 14.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவிகித்தத்தில் இருந்து 3.7 சதவிகிதமாக குறைந்துள்ளது,” என்று தெரிவித்தார். 

5.இந்த மசோதாவில், வடகிழக்கின் பல பகுதிகளுக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கைச் சேர்ந்தவர்கள், இந்த மசோதா தங்கள் அடையாளத்தைக் குலைத்துவிடும் என்று குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

6.சிவசேனா, முன்னதாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், மசோதாவின் வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்தது. 

7.காங்கிரஸ் தரப்போ, “இந்த மசோதா சட்ட சாசனத்துக்கு எதிரானது, சட்ட சாசன மாண்புக்கு எதிரானது, பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானது,” என்று கூறியுள்ளது.

8.காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி, சசி தரூர், “பாஜக, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா போன்றே யோசிக்கிறது. பாகிஸ்தான் எப்படி முஸ்லிம்களுக்கான ஒரு நாடாக இருக்கிறதோ, அதைப் போல இந்தியா இந்துக்களுக்கான நாடாக இருக்க வேண்டும் என்கிறது பாஜக,” என்றுள்ளார். 

9.குடியுரிமை திருத்த மசோதாவை லோக்சபாவில் கிழித்தெறிந்தார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. “ஹிட்லரின் சட்டத்தை விட இது கடுமையானதாக இருக்கிறது. இதைப் போன்ற ஒரு மசோதா சட்டமானால் அது இன்னொரு பிரிவினைக்குத்தான் இட்டுச் செல்லும்,” என்றார். 

10.முன்னதாக அமலில் இருந்த குடியுரிமை மசோதா, 1955, இந்தியக் குடியுரிமை கோரும் ஒரு நபர், தான் வாழ்ந்த கடைசி 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, முஸ்லிம் அல்லாதவர்கள் 5 ஆண்டுகள் அப்படி வாழ்ந்தால் குடியுரிமை கொடுக்கப்படும் என்கிறது. 

.