Citizenship Bill: திரிப்புரா அரசு, இன்று மாநிலத்தில் எஸ்எம்எஸ் மற்றும் இணைய சேவைகளை முடக்கியுள்ளது.
New Delhi: குடியுரிமை திருத்த மசோதா, ‘வடகிழக்கு இந்தியா மீது நடத்தப்படும் கிரிமினல் தாக்குதல்' என்றும் ‘வடகிழக்கை இன ரீதியாக வடிகட்டவே' இந்த மசோதா பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. நேற்று முன் தினம் மசோதாவுக்கு லோக்சபாவில் ஒப்புதல் கிடைத்த நிலையில், இன்று ராஜ்யசபாவில் தாக்கல் ஆகிறது.
“மோடி - ஷா அரசு கொண்டு வரும் இந்த குடியுரிமை திருத்த மசோதா வடகிழுக்கு இந்தியாவை இன ரீதியாக சுத்தப்படுத்தும் முயற்சியே. வடகிழக்கு மீதும் அவர்களின் வாழ்க்கை மற்றும் இந்தியாவை அவர்கள் பார்க்கும் விதத்தின் மீதும் நடத்தப்படும் கிரிமினல் தாக்குல் இது. நான் வடகிழக்கு மக்களுடன் துணை நிற்கிறேன். அவர்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் ராகுல்.
குடியுரிமை திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்குப் பகுதிகளில் பல வன்முறைப் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன.
திரிப்புரா அரசு, இன்று மாநிலத்தில் எஸ்எம்எஸ் மற்றும் இணைய சேவைகளை முடக்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு 48 மணி நேரம் அமலில் இருக்கும் எனத் தெரிகிறது. உடல்நலக் குறைவால் செபாஹிஜிலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 மாதக் குழந்தை, போராட்டக்காரர்கள் சாலையை முடக்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் இறந்துவிட்டதாக போலீஸ் தரப்பு சொல்கிறது.
வடகிழக்கில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு மாணவ அமைப்பு, இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பு, “வடகிழக்கின் தனித்துவமான இன அடையளத்தை குடியுரிமை திருத்த மசோதா அழித்துவிடும்,” என்று குற்றம் சாட்டியுள்ளது.
அசாமில் போராட்டம் மிகத் தீவிரமாக உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகங்களுக்கு அருகில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸுக்கும் மோதல் ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், வியாபார வளாகங்கள் மற்றும் சந்தைகள் போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு குடியுரிமை திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் ஒப்புதல் பெற்றது. இந்நிலையில் இன்று மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.