This Article is From Dec 14, 2019

மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

குடியுரிமை மசோதா வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தால், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

New Delhi:

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் இன்று இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அங்கும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின

முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

தொடர்ந்து, இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது. 

இந்நிலையில், மசோதா தொடர்பாக நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை காரசார விவாதங்கள் நடைபெற்றது. முஸ்லிம்கள் அல்லாத ஆப்கன், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் இருந்த வந்தவர்களுக்கு, அவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தார்கள் என்றால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை குடியுரிமை திருத்த மசோதா வழங்குகிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. 

இதற்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 124 பேரும் வாக்களித்ததால், மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து, குடியுரிமை மசோதா வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா கட்சி  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

தொடர்ந்து, மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தால், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுரா மாநிலங்களில் தொடர் மறியல் போராட்டங்கள், முழு அடைப்பு நடைபெற்றது. குவஹாத்தியில் ஆளுநர் மாளிகை, தலைமை செயலக்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது வாகன போக்குவரத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். 

இதனால் பல இடங்களில் போலீசாருடன் மோதல் வெடித்தது, போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. திரிபுராவில் வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. பொதுசந்தைகள் சூறையாடப்பட்டன. 

மேலும் போலீசாருடன் மோதல்கள் ஏற்பட்டன. தற்போது ஜம்மு காஷ்மீரில் இருந்து கூடுதல் துணை ராணுவப்படையினர் அசாம் மற்றும் திரிபுராவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ' இந்தியாவின் சகோதரத்துவத்தையும், இரக்க குணத்தையும் வெளிப்படுத்தும் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தகுந்த நாள் இது. குடியுரிமை திருத்த மசோதா 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு அளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நீண்ட நாட்களாக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் மக்களின் துன்பத்தை போக்கும்.'  என்று குறிப்பிட்டுள்ளார். 

.