This Article is From Dec 09, 2019

'நாட்டை மத ரீதியில் பிரித்தது காங்கிரஸ்; நாங்கள் அல்ல' - நாடாளுமன்றத்தில் கொதித்த அமித் ஷா!

Citizenship (Amendment) Bill: குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான முழு விவாதத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • அரசியலமைப்பு சட்டத்தை மசோதா மீறவில்லை என்கிறார் அமித் ஷா
  • மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கிறது
  • மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்
New Delhi:

நாட்டை மத ரீதியில் பிரித்தது காங்கிரஸ் தான் என்றும், தாங்கள் அல்ல எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசினார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

'நான் உங்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் விவாதத்தின்போது பதில் அளிப்பேன். எனவே மக்களவையை விட்டு வெளியேற வேண்டாம்' என்று அமித் ஷா கூறினார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா, முஸ்லிம்கள் அல்லாத பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்த மசோதா சமத்துவம் என்ற அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமையை பறிக்கிறது என்று கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். 

இந்த சர்ச்சைக்குரிமை மசோதா வடகிழக்கில் உள்ள சில மாநிலங்களில் பதற்றத்தையும் போராட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கணக்கில் அங்கே குடியிருப்பவர்களின் குடியுரிமையை இந்த மசோதா பறிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இருப்பினும் இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவையும் மீறவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. இந்தியாவில் உள்ள 0.001 சதவீத சிறுபான்மையினரைக் கூட இந்த மசோதா பாதிக்காது என்று அமித் ஷா கூறியுள்ளார். மசோதா அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் அதில் உள்ள நிறை குறைகளை விவாதிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னரே அதுபற்றி பேசக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். 

2. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், 'மதம் என்பது தேசிய அடையாளத்தை தீர்மானிக்கும் என்று கருதுவது பாகிஸ்தானின் சித்தாந்தம் ஆகும். மத அடிப்படையில் பாகுபாடு பார்த்து, 6 மதத்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கி மற்றவர்களுக்கு நிராகரிப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது' என்று கூறினார். 

3. சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் மசோதாவை அனைத்து வகையிலும் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு சட்டப்பூர்வமான குடியுரிமை வழங்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. 

4. 'பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசத்தில் மத ரீதியில் துன்புறுத்தப்படுவோருக்கு குடியுரிமை திருத்த மசோதா பாதுகாப்பு அளிக்கிறது. இதில் மதசார்பின்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்?' என்று அசாம் பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

5. மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, 'வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் நலனைக் கருதி அல்ல' என்று கூறியுள்ளார். சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில், 'இந்தியாவில் வேறு பிரச்னைகளே இல்லையா? இந்த சூழலில் குடியுரிமை திருத்த மசோதா என்ற பெயரில் புதிய பிரச்னைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்த மசோதாவின் அடிப்படையில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் மறைமுகமாக பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

6. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தள்ளது. இதில் உள்ள குறிப்பிட்ட சில பிரிவுகளால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நீண்டகாலமாக இருக்கின்றனர். அவர்கள் வெளியேற்றப்பட்டால் நில அமைப்பு ரீதியில் பிரச்னைகள் எழலாம். 

7. வடகிழக்கு மாநிலங்களின் நலன்களுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்காகத்தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிச்சயம் நிறைவேறும் என்றும் நம்பிக்கை கூறியுள்ள அவர், மக்களவையின் கேள்வி நேரத்திற்கு பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

8. மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்புகள், 11 மணி நேர முழு அடைப்புக்கு நாளை அழைப்பு விடுத்துள்ளன. மத அடிப்படையில் சட்டவிரோதமாக வந்தவர்களை வெளியே அனுப்பவதற்கு, 1971 மார்ச் 24-ம்தேதிதான் கடைசி நாள் என்று அசாம் சட்டம் கூறுகிறது. இதனை ரத்து செய்யும் முயற்சி என்று, குடியுரிமை மசோதாவை வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் கருதுகின்றன. மசோதா நிறைவேற்றப்பட்டால் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

9. இதே மசோதாவை கடந்த ஆண்டும் மோடி அரசு அறிமுகம் செய்திருந்தது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களைவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், வடகிழக்கு மாநில போராட்டங்களின் எதிரொலியாலும் அறிமுகம் செய்ய முடியவில்லை. 

10. உண்மையான குடியுரிமை சட்டம் 1955-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி, தனி நபர்கள் குடியுரிமை பெற வேண்டும் என்றால் அவர்கள் இந்தியாவில் குறைந்தது 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். தற்போது கொண்டு வர முயற்சிக்கப்படும் மசோதா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு 5 ஆண்டுளாக விதியை குறைத்துள்ளது. இதேபோன்று, சட்டவிரோதமாக குடிவந்தவர்களுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களை காக்கிறது. 
 

.