தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் ஆகிய கட்சிகளையும் சேர்த்தால் அதற்கு 116 பேரின் ஆதரவு கிடைக்கும்.
New Delhi: Citizenship (Amendment) Bill - கிட்டத்தட்ட 12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு குடியுரிமை திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் ஒப்புதல் பெற்றது. இந்நிலையில் இன்று மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மேலவையில் மசோதாவுக்குப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்கும் என்று பாஜக தரப்பு, உறுதிபட தெரிவித்து வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. இந்த காரணத்தினால்தான் மசோதாவுக்கு ஆதரவாக 311 பேர் வாக்களித்தனர். எதிராக வெறும் 80 பேர் மட்டுமே வாக்களிக்க முடிந்தது. அதே நேரத்தில் மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் தற்போது இருக்கும் மொத்த பலம் 240. அதில் 121 பேரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே குடியுரிமை திருத்த மசோதா ஒப்புதல் பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் ஆகிய கட்சிகளையும் சேர்த்தால் அதற்கு 116 பேரின் ஆதரவு கிடைக்கும். மேலும் 14 பேர் மசோதாவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், அதனால் மொத்த பலம் 130-ஐத் தொடும் என்றும் மத்திய அரசு நம்புகிறது.
அந்த 14 பேரில், சிவசேனாவின் 3 உறுப்பினர்களும் அடங்குவர். முன்னதாக பாஜகவுடன் கூட்டணியிலிருந்த சிவசேனா, மகாராஷ்டிர அதிகாரப் பங்கீடு பிரச்னை தொடர்பாக கூட்டணியை முறித்தது. அதே நேரத்தில் மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சி கொடுத்தது சிவசேனா. ஆனால், ‘மசோதாவில் நாங்கள் சொன்ன திருத்தங்கள் செய்யப்படவில்லை என்றால், ஆதரவு கொடுக்க மாட்டோம்,' என்று புதிய குண்டைத் தூக்கிப்போட்டுள்ளது சேனா. அதன் ஆதரவு இல்லாமலும் ராஜ்யசபாவில் மத்திய அரசால், மசோதாவுக்கு ஒப்புதல் பெற முடியும். ஆனால், அது பெரும்பான்மையைக் குறைத்துவிடும் என்று பாஜக அஞ்சுகிறது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் சார்பில் உள்ள 7 உறுப்பினர்கள், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் உள்ள 2 உறுப்பினர்கள், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் 2 உறுப்பினர்கள் ஆகியோரும் பாஜக கணக்குப் போடும் கூடுதல் 14-ல் அடங்குவர். இந்தக் கட்சிகளின் ஆதரவுத் தங்களுக்குக் கிடைக்கும் என்றே பாஜக எண்ணுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ராஜ்யசபாவில் 64 உறுப்பினர்கள் உள்ளார்கள். திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 46 பேரும் தங்கள் முகாமுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் பலம் 110 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.