சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விலகியுள்ளார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
ஹைலைட்ஸ்
- சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் ரஞ்சன் கோகாய் உள்ளார்
- நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க கோகாய் மறுத்து விட்டார்
- கோகாய்க்கு பதிலாக நீதிபதி ஏ.கே. சிக்ரி வழக்கை விசாரிக்கிறார்
New Delhi: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் இருப்பதால் தன்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கோகாய் கூறியுள்ளார்.
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மா இடத்தில் தற்காலிகமாக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில், அவர் பணியை தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர் பிரதமர் மோடி தலைமையில் கூடிய தேர்வுக்குழு அலோக் வர்மாவை நீக்கி விட்டு மீண்டும் நாகேஷ்வர ராவை நியமித்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நாகேஷ்வர ராவின் நியமனம் சட்ட விரோதமானது என்றும், சிபிஐ-யை ஏற்படுத்திய டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப்பிரிவு விதிகளை, நாகேஷ்வர ராவின் நியமனம் மீறியுள்ளதாகவும் பிரசாந்த் பூஷன் தனது மனுவில் குறிப்பிட்டார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், தன்னை அந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுவித்துக் கொண்டுள்ளார். சிபிஐ இயக்குனர் தேர்வுக்குழுவில் தான் இருப்பதால் தன்னால் விசாரணை நடத்த முடியாது என்று கோகாய் தெரிவித்துள்ளார். அவருக்குப்பதிலாக நீதிபதி ஏ.கே. சிக்ரி வழக்கை விசாரிக்கிறார்.