This Article is From Aug 27, 2018

35 ஏ பிரிவு குறித்து வதந்தி: ஜம்மூ - காஷ்மீரில் பதற்றம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் ’35 ஏ பிரிவு’ குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது

35 ஏ பிரிவு குறித்து வதந்தி: ஜம்மூ - காஷ்மீரில் பதற்றம்!
Srinagar:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் ’35 ஏ பிரிவு’ குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 31 ஆம் தேதி இது குறித்தான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில், ’35 ஏ பிரிவு ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது’ போன்ற வதந்திகள் பரவியுள்ளன. இதனால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கல்வீச்சு மற்றும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

1954 ஆம் ஆண்டு, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 35 ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவின் மூலம், ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது.

35 ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் இருந்தே, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வதந்தி பரவியதை அடுத்து, அனாந்தாங், சஃபகாதல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து ஜம்மூ - காஷ்மீர் போலீஸ் தரப்பு, ‘பிரிவு 35 ஏ, சட்ட சாசனத்திலிருந்து நீக்கப்பட உள்ளதாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பிவிட்டுள்ளன. ஆனால், இது ஆதாரமற்ற செயல். மக்கள், இதைப் போன்ற வதந்திகளை நம்பாமல் அமைதி காக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் பிரிவினை தலைவர்கள், வரும் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து மிர்வாயிஸ் உமர் ஃபரூக் என்ற பிரிவினை தலைவர், ‘சட்டத்தை நீக்குவதற்கு எதிராக வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும். மேலும், பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார். 

வழக்கு குறித்து வாதாடிய ஜம்மூ - காஷ்மீர் மாநில அரசு, வழக்கு விசாரணையை 31 ஆம் தேதி தள்ளிவைக்கச் சொல்லி வாதாடியது குறிப்பிடத்தக்கது. பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் இந்த கால நீட்டிப்பை மாநில அரசு கோரியது.
 

.