This Article is From Aug 04, 2020

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் வழங்கலாமா என்று குழப்பம் ஏற்பட்டது. 

Advertisement
தமிழ்நாடு Posted by

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. தொடர்ந்து, அடுத்தடுத்து நீடித்த ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தள்ளிப்போனது. 

ஜூன் மாதத்தில் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அரசு தீவிரம் காட்டி வந்தது. இதற்காக இரண்டு முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவித்தது.

Advertisement

இதனிடையே, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் அளிக்கலாமா என்று குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, பிளஸ் 2 மாணவர்கள் இலவச மடிக்கணினி மூலம் பாடங்களை படிப்பதற்கு ஐ-டெக் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்குமே இந்த திட்டம் கிடையாது. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கியதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. 

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என்றார்.

Advertisement

தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Advertisement