மாணவரின் உயிரிழப்பு தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Hyderabad: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். நெஞ்சு வலியால் அவரது உயிர் பிரிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. இதனை 9.63 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்நிலையில் செகந்திரபாத்தில் உள்ள ஸ்ரீசைத்தன்யா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், கோபி ராஜு (16 வயது) என்ற மாணவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை, அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
நெஞ்சுவலியால் அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.