This Article is From Jul 10, 2020

தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள்: கமல்ஹாசனின் அடுக்கடுக்கான கேள்விகள்

ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் எவ்வாறு ஒரு தொலைக்காட்சியின் வழி கல்வி கற்க முடியும். அதைத் தவிர்த்திட அரசின் திட்டம் என்ன?

Advertisement
தமிழ்நாடு Posted by

தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள்: கமல்ஹாசனின் அடுக்கடுக்கான கேள்விகள்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்கள் விடுபட்டு போகிறார்களே என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்காக இந்த தொலைக்காட்சி கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த முடியாமல் போனது, இதன் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் பொதுமுடக்கம் அடுத்தடுத்த மாதங்களாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்விமுறையில் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. இதனிடையே, ஆன்லைன் கல்விமுறை தேவையா, இல்லையா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. 

Advertisement

இதனிடையே, ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். தொடர்ந்து, தமிழகத்தில் இது சாத்தியமா என்ற பெரும் விவாதம் எழுந்துள்ளது. 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுதொடர்பாக கூறியதாவது, ஜூலை 13ம் தேதியிலிருந்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது ஊரடங்கில் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என எடுக்கும் முயற்சியாக இருந்தாலும், இணையத்தையும் மொபைலையும் மட்டுமே சார்ந்த இணைய கல்விமுறை என்பது 100% பெருநகரங்களுக்கானது என்பதை அனைவரும் அறிவார்கள்.

Advertisement

அப்படியிருக்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் என்பது நல்ல செய்தியாக தெரிந்தாலும், தீர யோசித்து அனைவருக்கும் பயன் தருவதற்காக எடுக்கப்பட்டதா அல்லது தனியார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்கள் விடுபட்டு போகிறார்களே என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு மட்டும் ஆரம்பிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

பல மாதங்களுக்கு முன்னே நடைமுறைக்கு வந்து செயல்படாமல் இருக்கும் கல்வி தொலைக்காட்சியைப் பற்றிய அறிமுகம், தொலைக்காட்சி வழி கற்றலின் சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் பற்றி எந்தவித களஆய்வும் இல்லாமல், நடைமுறை பிரச்சனைகளை பற்றி யோசிக்காமல், அவசரமாக எடுத்த முடிவாகவே தெரிகிறது. கல்வி அனைவருக்குமானது. பொருளாதார பாகுபாடுகள் தாண்டி தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் நீதி மய்யம் சில கேள்விகளை முன்வைக்கிறது.

Advertisement

ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் எவ்வாறு ஒரு தொலைக்காட்சியின் வழி கல்வி கற்க முடியும். அதைத் தவிர்த்திட அரசின் திட்டம் என்ன?

மாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகங்கள் ஏற்படின் அதைத் தீர்த்திட யார் உதவி செய்வார்? முதல் தலைமுறையாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு படிக்காத பெற்றோர்களால் எப்படி உதவ முடியும்?

இப்படி ஒரு தொலைக்காட்சியில் வகுப்புகள் எடுக்கப்பட போகிறது. அதனால் இந்த நேரத்தில் வீட்டின் பெரியவர்கள் தொலைக்காட்சியை குழந்தைகளுக்கு தந்து விட வேண்டும் என்ற விழிப்புணர்வு எல்லாருக்கும் ஏற்பட்டிட அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?

Advertisement

இன்னும் டிவியே இல்லாத வீடுகள் கொண்ட கிராமங்கள், கேபிள் டிவி இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கான அரசின் அறிவுரை என்ன?

கற்றல் என்பது ஒவ்வொரு மாணவரின் திறன் சார்ந்தது. கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் பாடத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அரசு திட்டமிட்டுள்ளதா?

Advertisement

கல்வி என்பது ஒரு சராசரி குடும்பத்தின் எதிர்கால கனவு. பின் தங்கியிருக்கும் தன் வாழ்வும், தன் குடும்பத்தின் எதிர்காலம் சிறக்க ஒவ்வொரு குடும்பமும் நம்பியிருக்கும் ஏணி. எனவே அரசு குழந்தைகள் கல்வி விஷயத்தில் அவசரம் காட்டாமல், முன்பின் முரணாக ஆணைகள் பிறப்பிக்காமல், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement