This Article is From Jul 15, 2020

‘3 நாட்களில் அட்டவணை; 14 சேனல்கள் தயார்!’- பள்ளி மாணவர்களுக்கான வகுப்பு பற்றி அமைச்சர்!!

"பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் வகுப்பைப் பொறுத்தவரை, 14 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வகுப்புகளை ஒளிபரப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது"

Advertisement
தமிழ்நாடு Written by

"வகுப்புகளுக்கான அட்டவணை இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும்”

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் ஒரே நாளில் 4,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையை அடுத்து, மதுரை, விருதுநகர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இப்படியான சூழலில் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைத் திறக்கத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு பாடம் கற்பிப்பதற்காக, ஆன்லைன் வகுப்பு முறையை ஏற்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. முதலில் மாணவர்கள், லேப்டாப் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறும் வகையில் இருக்கும் எனக் கூறப்பட்டது. பின்னர், தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடத்தப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் பற்றி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் வகுப்பைப் பொறுத்தவரை, 14 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வகுப்புகளை ஒளிபரப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எப்படி, எந்த முறையில் வகுப்புகள் ஒளிபரப்பப்படும் என்பது குறித்து இன்னும் 3 நாட்களில் தெரிவிக்கப்படும். வகுப்புகளுக்கான அட்டவணை இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும்” எனக் கூறியுள்ளார். 

Advertisement

முன்னதாக, ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு ஏற்பாடு செய்தால், அதில் கலந்து கொள்ளும் வசதி பல மாணவர்களிடம் இல்லை என்று கூறி, பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதேபோல, விடுபட்ட பொதுத் தேர்வுகளை நடத்துவதிலும் முனைப்புக் காட்டி வந்தது தமிழக அரசு. அதுவும் தொடர் எதிர்ப்புகளுக்குப் பின்னர் கைவிடப்பட்டுள்ளது. 

Advertisement